
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் பாராட்டிப் பேசியிருந்தார். அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடியுடனான சந்திப்பு நம்பிக்கைக்குரியது என்று சசி தரூர் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல், கேரளாவில் இடதுசாரி ஆட்சியில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று பத்திரிகை ஒன்றியில் சசி தரூர் பாராட்டி எழுதியிருந்தார். கேரளா அரசை பாராட்டி சசி தரூர் கூறிய கருத்து, மாநில காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே, பிரதமர் மோடியையும், கேரளா அரசையும் பாராட்டிப் பேசியிருந்த சசி தரூர் கூறிய கருத்துக்கள், காங்கிரஸ் கட்சி தலைமையும் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது. இதற்கிடையில் சசி தரூர், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, கட்சியில் தனது பணி என்ன என ராகுல் காந்தியிடம் சசி தரூர் முறையிட்டதாகவும், சசி தரூரின் கோரிக்கைகள் தொடர்பாக ராகுல் காந்தி சாதகமான பதிலை அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து சசி தரூர் ஓரங்கட்டப்படுகிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது.
கட்சியில் இருந்து விலகிச் செல்வதாக வந்த தகவல்களை சசி தரூர் மறுத்தாலும், ‘கட்சி என்னை விரும்பினால், நான் அங்கே இருப்பேன். இல்லையென்றால், எனக்கு என் சொந்த வேலைகள் உள்ளன. எனக்கு வேறு வழிகள் இல்லை என்று நீங்கள் நினைக்கக்கூடாது’ என்று காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக எச்சரித்தார். இந்த சலசலப்புக்கு மத்தியில் சசி தரூர், பா.ஜ.க மத்திய அமைச்சரை சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கலந்து கொண்டார். அப்போது, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசி அவருடன் சசி தரூர் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இது குறித்து சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “பிரிட்டனின் வணிகம் மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் ஜோனதன் ரெனால்ட்ஸ் உடன், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்டகாலமாக முடங்கிக் கிடந்த FTA பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, இது மிகவும் வரவேற்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையை மாற்றக் கோரிய 23 காங்கிரஸ் தலைவர்களுள் சசி தரூரும் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.