
திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, ஆண்டுதோறும் நடைபெறும் நிலையில் இந்தாண்டும் நடைபெற்றுள்ளது. அமெரிக்கா லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த விழாவில் சிறந்த ஆவணப்படம் பிரிவில் ‘நோ அதர் லேண்ட்’ படம் விருது வென்றது. இப்படம் பாலஸ்தீனிய சமூக ஆர்வலர் பேஸல் அட்ரா, இஸ்ரேலிய இராணுவத்தால் தான் வாழ்ந்த நிலம் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த போராடுவதை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
இஸ்ரேல் - பாலஸ்தீன கூட்டணியில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை சமூக ஆர்வலரான பேஸல் அட்ரா, ஹம்தான் பலால், யுவால் ஆப்ரஹாம், ரேச்சர் ஸோர் ஆகிய மூன்று பேருடன் இணைந்து இயக்கியுள்ளார். அவர்களுடன் விழா மேடையில் விருதினை பகிர்ந்து கொண்ட அவர், “சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, நான் தந்தையானேன். இப்போது வன்முறை, வீடு இடிபாடுகள் மற்றும் கட்டாய இடப்பெயர்வுகளுக்குப் பயந்து நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் மகளுக்கும் இதே போன்ற ஒரு வாழ்க்கை அமைந்து விடக் கூடாது என்று நம்புகிறேன். பாலஸ்தீன மக்களுக்கு ஏற்படும் அநீதி மற்றும் இன அழிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கைள் எடுக்க கேட்டுக்கொள்கிறேன்” என்றார். இவர் சமூக ஆர்வலர் மட்டுமல்லாது பத்திரிக்கையாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் மற்றொரு இயக்குநரான யுவால் ஆப்ரஹாம் பேசுகையில், “நாங்கள் இப்படத்தை இணைந்து உருவாக்கியதற்கான காரணம் இரண்டு மக்களும் இணைந்து குரல் கொடுத்தால் அது வலுவானதாக இருக்கும். நாங்கள் ஒருவரையொருவர் பார்க்கிறோம். காசா மக்களின் கொடூரமான அழிவு முடிவுக்கு வர வேண்டும். அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த குற்றத்தில் கொடூரமாகப் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். எல்லா பிரச்சனைகளுக்கும் வேறு ஒரு வழியில் தீர்வு இருக்கிறது. இன மேலாதிக்கம் இல்லாத, எங்கள் இரு மக்களுக்கும் தேசிய உரிமைகளை வழங்கும் அரசியல் தீர்வே அது. ஆனால் இந்த வழியை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தடுக்கிறது. நாங்கள் பின்னிப்பிணைந்திருப்பதை அவர்களால் பார்க்க முடியவில்லையா?. பேஸல் அட்ராவின் மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருந்தால்தான் என் மக்களும் உண்மையில் பாதுகாப்பாக இருக்க முடியும்” என்றார். இவர் இஸ்ரேலிய புலனாய்வு பத்திரிக்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.