வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பேராசிரியை நிர்மலாதேவியை கைது செய்தனர் போலீசார்.
விருதுநகர் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியின் பேராசிரியரான நிர்மலாதேவி, கல்லூரியில் படித்து வரும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் போக்கில் அலைபேசியில் பேசிய ஆடியோ வாட்ஸ்ஆப், சமூகவளைதளங்களில் வைரலாக பரவியது. கல்லூரி பேராசிரியரின் இந்த அதிர்ச்சிமிக்க பேச்சு பொதுமக்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கல்லூரி நிர்வாகமானது பேராசிரியர் நிர்மலா தேவியை இடைநீக்கம் செய்தது. இதை தொடர்ந்து இன்று கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துசெல்லும் வகையில் பேசிய பேராசிரியரை கைது செய்யவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பேராசிரியரை கைது செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து பேராசிரியர் நிர்மலா தேவி மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் நிர்மலா தேவி கைது செய்ய இன்று மதியம் சென்றபோது, வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டுவிட்டார். இதனால் போலீசார் அவரை கைது செய்ய பல கட்ட முயற்சிகள் எடுத்து வந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர்.