அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59 ஆக உயர்த்தியதற்கு அரசு ஊழியர்களிடம் எதிர்ப்புகளே அதிகமாக இருக்கிறது. தனது அரசின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முதல்வர் எடப்பாடி எடுத்துள்ள நடவடிக்கை என்றாலும் கூட, பதவி உயர்வுகளுக்காகக் காத்திருக்கும் பணியாளர்களுக்கும், புதிய வேலை வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதுகுறித்து தங்களின் அதிருப்திகளையும் எதிர்ப்புகளையும் அரசுக்குத் தெரிவித்தபடி இருக்கிறார்கள் அரசு ஊழியர்கள்.
இந்த மாதம் ஓய்வு பெறுபவர்களிடமிருந்து இந்த அரசாணை அமலுக்கு வருகிறது. பொதுவாக, அரசு ஊழியர் ஒருவரின் பிறந்த தேதி மாதத்தின் முதல் நாளாக இருந்தால், அதற்கு முந்தைய மாதத்தின் கடைசி நாளில் அவர் ஓய்வு பெற அனுமதிக்கப்படுவார். அதுவே, மாதத்தின் 2–ஆம் தேதியில் ஒருவர் பிறந்திருந்தால் அந்த மாதத்தின் கடைசி நாளில் ரிட்டயர்ட்மெண்ட் கொடுக்கப்படும் என்பதுதான் விதி.
அந்த வகையில், ’’ மே மாதம் 2-ஆம் தேதியைப் பிறந்த நாளாகக் கொண்டு இந்த வருடம், இந்த மாதம் ரிட்டயர்டு ஆகும் அனைத்து அரசு ஊழியர்கள் (ஓ.ஏ.க்களை தவிர) மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த 1 வருட நீட்டிப்பு பொருந்தும். தற்போது ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கணக்கிட்டால் தோராயமாக 30 ஆயிரம் பேர் இந்த மாதம் ஓய்வு பெறவிருந்தனர். இவர்கள் ஓய்வு பெற்றால் சாதாரண பணியாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் 15 லட்சம் ரூபாயும், உயர் பொறுப்பிலுள்ள அதிகாரிகளுக்கு அதிகபட்சம் 40 லட்சம் ரூபாயும் அவர்களுக்கு அரசு செட்டில்மெண்ட் செய்ய வேண்டியதிருக்கும். அந்த வகையில், சுமார் 5,000 கோடி ரூபாய் அரசுக்குத் தேவை. இதுவே ஒரு வருடத்துக்கு கணக்கிட்டால் 12 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி தேவைப்படும். தற்போது ஓய்வு பெறும் வயதை நீட்டித்திருப்பதால் இன்னும் 1 வருடத்திற்கு செட்டில்மெண்ட் சிக்கல் எடப்பாடி அரசுக்கு இல்லை. ஆக, அவசர நெருக்கடியிலிருந்து தப்பித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி’’ என்கின்றன அரசு ஊழியர் சங்கங்கள்.
இதற்கிடையே, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்து பொது நல வழக்குப் போட தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் ஆலோசிக்கிறார்கள். கரோனா விவகாரத்தால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் மீறி பொது நல வழக்கு குறித்தும் ஆலோசிக்கிறார்கள் தமிழக இளைஞர்கள் !