Skip to main content

“நான் மட்டும் எதுக்கு உயிரோடு இருக்கணும்..” - பரிதாபமாக உயிரிழந்த மனைவி!

Published on 12/04/2025 | Edited on 12/04/2025

 

 Wife lost in family dispute Husband is in intensive care

ஈரோடு, சூரியம்பாளையம், குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மதன் ராஜ். இவரது மனைவி சினேகா(30). இருவரும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மதன்ராஜ் லாரி வைத்து தொழில் செய்து வந்தார். சினேகா ஆணைக்கல் பாளையத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் மதன்ராஜ் அடிக்கடி சந்தேகப்பட்டு சினேகாவிடம் பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சினேகா தனது பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளாராம். மேலும், சினேகாவிற்கு அவரது பெற்றோர் ஆறுதலும் கூறி வந்திருக்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை சினேகா வேலை செய்யும் இடத்திற்கு மதன்ராஜ் சென்று தகராறில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் மாலை கணவன் மனைவி இருவரும் ஆனைக்கல் பாளையம் 4 ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மதன்ராஜ் சினேகாவை பார்த்து உன்னுடன் வாழ்வதை விட விஷம் குடித்து செத்துப் போகிறேன் என்று சொல்லி பேண்ட் பாக்கெட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். உடனே சினேகா நான் மட்டும் எதுக்கு உயிரோடு இருக்கணும் என்று சொல்லி மதன்ராஜ் இடம் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை பிடுங்கி அவரும் குடித்துள்ளார். 

பின்னர் அவர்களாகவே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வந்து இருவரையும் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்குச் சிகிச்சை பலனின்றி சினேகா பரிதாபமாக இறந்தார். மதன்ராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் - மனைவி தகராறில் இருவரும் விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்