தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு இயக்குநர் கரு.பழனியப்பன் பதிலளிக்கின்றார்.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. உயர்நீதிமன்றமே நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகிறார். இந்தச் சம்பவங்கள் எல்லாம் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தச் சம்பவங்கள் எல்லாம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது என்று நீங்கள் சொல்கிறீர்கள் இல்லையா? அந்த நம்பிக்கை ஒன்றை பற்றிக் கொண்டுதான் நாம் எல்லாவற்றையும் நடத்துகின்றோம். இறந்த கால வரலாறு நமக்கு நீதி கிடைப்பதாகச் சொல்லியிருக்கின்றதா என்றால் இல்லை, எனவே இந்த வழக்கைப் பொறுத்த வரையில் எதிர்மறையாகச் சிந்திக்காமல் நேர்மறையாகச் சிந்தித்து இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்று நம்ப வேண்டும். அதுதான் கடைசி இடம். அந்த இடத்தில் கிடைக்கும் என்று நம்புவது நம்முடைய கடமையும் கூட. சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட நிகழ்வு என்பது லாக் அப் டெத் என்று உறுதியாகக் கூற முடியும். இந்த மாதிரி நிறைய முறை நடைபெற்றுள்ளது.
ஆனால் இந்த அளவு கொடூரமாக நடத்தப்பட்டதில்லை. அதைத்தான் இந்த வழக்கில் நாம் அனைவரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம். எல்லா லாக் அப் டெத்களும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். காவல்துறையினருக்கு அவர்களை அடிப்பதற்கோ கொல்வதற்கோ எந்த உரிமையும் இல்லை. இவ்வளவு நாள் இந்த மாதிரியான சம்பவம் எவ்வித அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது ஏன் ஏற்படுத்துகின்றது என்றால், குற்றமற்ற ஆட்களைக் கொண்டுபோய் கொலை செய்துள்ளார்கள். இதுவரை அந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறுகின்றது என்றால் அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டு இருப்பார்கள், காவல்துறையினர் அவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் அவ்வாறு நடைபெறுவதே தவறான ஒரு முன் உதாரணம் ஆகும். அதுவே தடுக்கப்பட வேண்டிய ஒரு நடைமுறைதான்.
இப்படி எந்தக் குற்றமும் செய்யாத ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண் மக்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று கொலை செய்தார்கள் என்ற கோபமே தற்போது அனைவரின் மனதிலும் நிற்கின்றது. இந்த விஷயத்தில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ரகோத்தமன் முக்கியத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார். அவர் இதே மாதிரியான பல சம்பவங்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் இவ்வளவு மோசமான அத்துமீறலை நான் கண்டதில்லை என்று குறியுள்ளார், அப்படி என்றால் காவல்துறையினர் அவர்களிடம் எந்த மாதிரியான வக்கிரத்தைக் காட்டியிருப்பார்கள். இந்த மாதிரி வழக்குகளை நிறைய பார்த்தவர் அவர். அவரே அதிர்ந்து போகிறார் என்றால் இவர்கள் என்ன மாதிரியான குற்றத்தைச் செய்திருக்கிறார்கள் என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.