நக்கீரனில், 2022 செப்டம்பர் இதழில், 'வசமாய் மாட்டிக்கொண்ட மதுரை திருச்சபை' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். 1912ல் ஆங்கிலேய அரசு, அமெரிக்கன் போர்ட் மிஷினரிக்கு, ஆதரவற்ற குழந்தைகள் கல்விக்கூடமும், அவர்கள் தங்கும் விடுதியும் நடத்தக் கொடுத்திருந்தது. அதற்கான பராமரிப்புச் செலவுக்காக 31 ஏக்கரில் விவசாயம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்திக்கொள்ளச் செய்தது. இவை அனைத்தும் மாவட்ட கலெக்டரின் கண்காணிப்பில் இருக்கவேண்டுமென்றும், பள்ளியையும், விடுதியையும் நடத்தமுடியவில்லை என்றால் அதை மீண்டும் அரசு எடுத்துக்கொள்ளும் என்றும் நிபந்தனை விதித்திருந்தது.
ஆங்கிலேயர்கள் ஆட்சியை விட்டுப் போகும்போது முறைப்படி இதை ஒப்படைக்காமல், தென்னிந்திய திருச்சபை 2005ல் அந்த இடத்தின் ஒரு பகுதியை கொல்கத்தாவை சேர்ந்த சிலருக்கு விற்றுவிட்டனர். அதில் தற்போது 'லோட்டஸ் அப்பார்ட்மெண்ட்' என்று மதுரையிலேயே மிகப்பெரிய அப்பார்ட்மெண்டை கட்டியுள்ளனர். மீதி இடத்தில் ரோட்டின்மேல் 200 கடைகளைக் கட்டியவர்கள், அந்த இடத்தில் 60 ஆண்டுகளாக ஓட்டு வீடுகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்போது அந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் இறங்க, நாம் இரு தரப்பினரையும் சந்தித்து செய்தியாக நக்கீரனில் கொண்டுவந்தோம்.
அதனைத் தொடர்ந்து, 2023 அக்டோபரில், அந்த திருச்சபையினரின் இடங்களில் இருந்த மக்கள், முறையான ஆவணங்களின் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் கொடுத்த ஆவணங்களின்படி தமிழ்நாடு நிலநிர்ணய ஆணையம் முறையாக விசாரணை செய்து, அந்த நிலத்தை அரசுக்கு திரும்ப ஒப்படைக்க ஆணை பிறப்பித்தது. அந்த உத்தரவை கடைபிடிக்காமல் காலம்கடத்துவதாக கிருஸ்தவ சீர்திருத்த மக்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடத்தப்பட, நம் நக்கீரனில் '1000 கோடி நிலம் ஆக்கிரமிப்பு! சட்டச்சிக்கலில் தென்னிந்திய திருச்சபை!' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியின் தொடர்ச்சியாக தற்போது சென்னை உயர் நீதிமன்றம், அரசாங்க இடம் நிபந்தனைகளை மீறி விற்பனை செய்யப்பட்டிருப்பது ஆவணங்கள் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. அதன்படி, அரசு நிலமான 31 ஏக்கர் இடத்தை அரசு கையகப்படுத்தலாம் என்று உத்தரவு போட்டுள்ளது. அந்த உத்தரவின்படி வணிக வளாகம் மற்றும் லோட்டஸ் அடுக்குமாடிக் கட்டடத்தின் முன், "உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி விசாரணை செய்யப்பட்டு, நில நிர்வாக ஆணையரின் செயல் முறை ஆணை 11-1-2024ன் படி, நில ஒப்படைப்பானது ரத்து செய்யப்பட்டு, அரசால் அந்த நிலம் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனவே அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தில் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற எச்சரிக்கை அறிவிப்புப் பதாகை அரசு சார்பில் வைக்கப்பட்டிருப்பது தென்னிந்திய திருச்சபையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 14 மாடி அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கியவர்கள் திருச்சபையின் பேராயரைப் போய் பார்க்க, அவரோ, "இதெல்லாம் எனக்கு முன்னால் இருந்த பெர்னாண்டஸ் இரத்தினராஜா காலத்தில் நடந்தவை. நீங்கள் மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள். லோட்டஸ் நிறுவனத்திடம் முறையிடுங்கள்'' எனக்கூறி அனுப்பிவைக்க, இது தென்னிந்திய திருச்சபைக்குள் இருக்கும் பொறுப்பாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கிருஸ்தவ சீர்திருத்த சங்கத்தின் தலைவர் தேவசகாயம் நம்மிடம், "ஆங்கிலேயர் மதுரை கிருஸ்தவ திருச்சபைக்கு ஏழை விதவைப் பெண்கள், மற்றும் ஏழை எளிய பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, அரசு நிபந்தனைகளின் பேரில் வழங்கிய 31 ஏக்கர் அரசு நிலத்தை, ஏழை எளிய பெண்களின் வயிற்றிலடித்து, சி.பெர்னாண்டஸ் ரெத்தினராஜா மற்றும் அவரின் கூட்டாளிகள், போலிப் பத்திரங்களைத் தயார் செய்து விற்பனை செய்து, ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்து, பணத்தை அபகரித்து அள்ளிச்சென்றதும் பத்தாமல், அங்கு குடியிருந்த ஏழை மக்களின் குடிசையையும் காலி பண்ணத் திட்டம் செய்ததும் தான் எனக்கும் எங்கள் சங்கத்திற்கும் வருத்தமாக இருந்தது. அதனால்தான் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தோம். இந்த உத்தரவின்படி, அந்த 31 ஏக்கர் நிலத்தை, அரசாங்கமே மீள எடுத்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, சி.பெர்னாண்டஸ் ரெத்தினராஜா மற்றும் அவரின் கூட்டாளிகளின் மீது, கிரிமினல் வழக்கு தொடுத்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து சிறையில் தள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உண்மையின் பக்கம் நின்ற நக்கீரனுக்கு இந்த ஏழை மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.
நக்கீரன் என்றைக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவே ஒலிக்கும்.