Skip to main content

"குடியுரிமை மசோதாவை படித்து பார்க்கக் கூட நேரம் கொடுக்கவில்லை.." கனிமொழி பேச்சு!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019


நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் இதை எதிர்த்து மாணவர்கள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " பாஜகவினரை எதிர்த்து கருத்து தெரிவித்தால் அவர்களை நகர்புற நக்சல்கள் என்று கூறுகிறார்கள். இன்று நம்மை பார்த்து நக்சல்கள் என்று சொல்கிறார்கள். தற்போது பிரதமரின் வாயில் இருந்தே அந்த வார்த்தைகள் வந்துள்ளது. எனவே அதுகுறித்து நாம் பெருமையாக நினைக்கூடிய நேரம் இது. குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி நாம் இங்கே அதிகம் விளக்கி பேச வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன். நாம் அனைவரும் அதை பற்றி உணர்ந்ததால், தெரிந்ததால்தான் இங்கே ஒன்றாக கூடியிருக்கிறோம். அதனால்தான் நாம் இங்கே ஒன்றாக நின்றுகொண்டிருக்கிறோம். அந்த விதத்தில் நம்மை இவர்கள் ஒன்றாக இணைத்துள்ளார்கள். இந்த சேப்பாக்கத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது. அதே வகையில் இந்த போராட்டமும் நிச்சயம் வெற்றியடையும். ஒவ்வொரு மாதமும், மாதம் இரண்டு முறையும் நாம் இங்கே கூடுகிறோம், போராட்டத்தில் ஈடுபடுகிறோம். சில வாரங்களுக்கு முன்புதான் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து நாம் இங்கு போராட்டத்தில் ஈடுபட்டோம். அதற்கு இடையிலேயே பல போராட்டங்களில் ஈடுபட்டோம். இன்று குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 
 

kanimozhi



நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களுக்கு ஒரு லிஸ்ட் கொடுக்கப்பட்டு அடுத்து வரும் மசோதாக்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படுவது வழக்கம். இதுவே காலங்காலமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கமான முறையாகும். ஆனால் இந்த மசோதா குறித்து முறையான முன் அறிவிப்புக்கள் ஏதுமின்றி அவசர கதியில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் இருந்தே இதில் உள்ள உள்நோக்கத்தை நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். பத்து நிமிடத்தில் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு அது நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட நிலையில்தான் குடியுரிமை சட்டம் நிலை இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் படித்து பார்க்க கூட நேரம் இல்லாத நிலையில்தான் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே மாதிரியாக இதற்கு முன் நாடாளுமன்ற வரலாற்றில் நடைபெற்றது இல்லை. இவ்வாறு குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்ட முறையே முன் எப்போதும் இல்லாத வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை போன்றே மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு இதற்கு முன் எந்த அரசுகளும் நடந்து கொண்டது கிடையாது. இத்தகைய போக்கை கண்டித்து நாம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலைகளை அவர்களே உருவாக்கி உள்ளார்கள்" என்றார்.


 

சார்ந்த செய்திகள்