கேரள மாநிலம், மலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பாபு மலையேறுவதில் ஆர்வம் கொண்டவராகக் கூறப்படுகிறது. கடந்த திங்கள்கிழமை அன்று பாபுவும், அவரது மூன்று நண்பர்களும் குரும்பாச்சி மலைக்கு சென்றுள்ளனர். மலையேற்றத்தின் போது நடுவழியில் கால் இடறியதில் பாபு உருண்டு விழுந்து, மலை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கிக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, பாபுவின் நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அங்கு வந்த தீயணைப்புப் படையினர், இளைஞரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், முயற்சி வெற்றியடையவில்லை. இடுக்கான பகுதி என்பதால் கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது.
இதனையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், பாபுவை மீட்க இந்திய ராணுவத்தின் உதவியை நாடினார். இதனைத்தொடர்ந்து இந்திய இராணுவத்தின் மீட்புப்படை பாபு சிக்கியிருந்த பகுதிக்கு விரைந்தது. இந்தநிலையில் தற்போது இராணுவம், கப்பற்படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் அடங்கிய குழு, 40 மணிநேரத்திற்கும் மேலாக மலை இடுக்கில் இருந்த குகையில் மாட்டிக்கொண்டிருந்த பாபுவை மீட்டுள்ளனர்.