அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மேற்குவங்க மாநில அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக்கின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க அமைச்சரவையில் ஜோதிபிரியா மல்லிக் என்பவர் வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், அதன்மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் கூறி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த புகாரின் பேரில் அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக் அமலாக்கத்துறையால் நேற்று (27.10.2023) கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக்கின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதுமட்டுமின்றி அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக்கின் சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கையிலும் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.