குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த சட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, "குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து பரப்பப்படும் பொய்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சில நகர்ப்புற நக்சல்களும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்த வதந்திகளைப் பரப்புகின்றனர். இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இந்தச் சட்டத் திருத்தம் குறித்து கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தும்போது ஒருவர் கோயிலுக்குச் செல்பவரா அல்லது மசூதிக்குச் செல்பவரா எனக் கேட்பதில்லை. எனது பணியில் பாரபட்சம் உள்ளது என எதிர்கட்சிகளால் கூற முடியுமா?" என பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பினராயி விஜயன், "சாதியும் மதமும் எந்தத் திட்டங்களுக்கான அளவுகோலாக இருந்ததில்லை என்று மதிப்பிற்குரிய பிரதமர் கூறியிருக்கிறார். பிரதமர் உணர்ச்சிவசப்படுவது மட்டும் போதாது. அவர் கூறியதைச் செயல்களில் நிரூபிக்க வேண்டிய தருணம் இது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் அடிப்படைப் பிரச்சனையே, இது மதங்களின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது என்பதுதான்" என தெரிவித்தார்.