2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவியது. அதன் விளைவாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று வரை தொடர்கிறது.
இந்நிலையில் கரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி உருவாக்கும் பணியில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டன. இதனிடையே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழமும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ‘கோவிஷீல்ட்’ என்ற தடுப்பூசியை, இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்து வருகிறது. அதேவேளை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியது.
இதனையடுத்து மத்திய அரசு ‘கோவிஷீல்ட்’, ‘கோவேக்சின்’ இரண்டு தடுப்பூசிகளுக்கும் அனுமதி அளித்து, ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று (16/01/2021) தொடங்கி வைக்கிறார்.