மத்திய அரசு பல்வேறு துறைகளை தனியாருக்கு மாற்றப்படும் என்ற அறிவிப்பினை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்பு அரசியல் அரங்கில் பெரும் சச்சரவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இதுதொடர்பாக பலவேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், நம்முடைய கேள்விக்குப் பதிலளிக்கின்றார் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த கனகராஜ். அவரின் பதில் வருமாறு,
மத்திய அரசு ஏர் இந்தியா உள்ளிட்ட துறைகளில் தனியார் மயத்தை ஏற்கனவே அனுமதித்திருந்தார்கள். தற்போது இந்த 20 லட்சம் கோடி பேக் கேஜ் முறையில் பல்வேறு துறைகள் தனியார் மயம் ஆக்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இந்த அறிவிப்புக்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தியாவின் செல்வ ஆதாரங்களை எல்லாம் ஒரு சேல்ஸ் உமன் மாதிரி விற்பதைப் பற்றி பேசி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். உலகத்திலேயே ஒரு நிவாரணத்தை இப்படி அறிவித்து எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறீர்களா என்றால் நிச்சயம் பார்த்திருக்க முடியாது. பட்ஜெட்டை ஒரு மணி நேரம் படிக்கிறார்கள். ஆனால் கடந்த ஐந்து நாட்களாக இதைத் தொடர்ந்து அறிவித்து வருகிறார்கள். கடந்த ஆட்சியில் என்ன செய்தோம், 2020இல் என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லி வருகிறார்களே தவிர இந்தப் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலமை பற்றி அவர்கள் எதுவுமே கூறுவதில்லை. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியாவில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு வேண்டுமானால் இது லாக் டவுனாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் இருக்கும் நிலைமையில் அவர்கள் உணவில்லாமல் எப்படி வீட்டிற்குள் இருக்க முடியும். அதனால் தான் அவர்கள் நடக்க முடியாத சூழ்நிலைகளில் கூட அவர்கள் கஷ்டப்பட்டு தொடர்ந்து நடந்து தங்கள் வீடுகளுக்குச் செல்லமாட்டோமா என்று ஏங்குகிறார்கள்.
அவர்கள் சாப்பாட்டுக்கு இல்லாமல், இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு வழியில்லாமல் தொடர்ந்து செல்கிறார்கள். அதில் நிறைய பேர் செத்துபோய் விட்டார்கள். அவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும். மத்திய பிரதேசத்தில் 8 பேர் இறந்து போய்விட்டார்கள். தினசரி தற்போது வரையிலும் இறப்புகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றது. இந்த நிலைகளைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டின் சொத்துகளைத் தனியாருக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் கொடுப்பதற்கு அவர்கள் துணை போய் இருக்கிறார்கள். இது நாட்டிற்கும் நல்லதல்ல, அவர்களுக்கும் நல்லதல்ல. நாட்டு மக்கள் கஷ்டப்படும் போது அதனைக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், நாட்டை ஆளும் அரசு மக்கள் விரோதப் போக்கில் ஈடுபடக் கூடாது. ஆனால் தற்போதைய மத்திய அரசின் போக்கு என்பது மக்களுக்கு நூறு சதவீதம் எதிரானதாகவே இருக்கின்றது. இதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். காலத்தின் முன் அவர்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள்" என்றார்.