ஆளுநர் நடத்தி வரும் அரசியல் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி பகிர்ந்து கொள்கிறார்.
சங்பரிவார் சொல்வதைப் பேசுவதுதான் ஆளுநர் ரவியின் வேலை. ஆளுநர் மாளிகையின் செலவை அதிகரித்து வரும் இவர், திராவிட மாடல் குறித்து பேசி வருகிறார். இது உத்தரப் பிரதேசமோ குஜராத்தோ அல்ல. நீங்கள் செய்யும் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. எல்லோருக்கும் எல்லாம் என்கிற எண்ணத்தில் திராவிட மாடல் என்கிற வார்த்தையை நம்முடைய முதலமைச்சர் பயன்படுத்தி வருகிறார். சமூகநீதி மீதான அக்கறையை அது காட்டுகிறது. ஒடுக்கப்பட்டவர்களை மேலே கொண்டு வருவதுதான் திராவிட மாடல்.
தமிழ்நாடு திராவிட பூமி. குஜராத்தில் அவர்களுடைய தாய்மொழியான குஜராத்தியை ஒழித்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் அரசின் கொள்கை. ஆளுநர் மாளிகையின் செலவு குறித்த தகவல்களை நிதியமைச்சர் பிடிஆர் சட்டமன்றத்திலேயே தெரிவித்தார். ஆளுநர் மாளிகையின் மூலம் பெற்ற தகவல்கள் தான் அவை. உத்தரப் பிரதேசத்தில் நடுரோட்டில் வைத்து ஆளைக் கொளுத்துகிறார்கள். பில்கிஸ் பானுவின் நிலை என்ன? தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்கிற நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது.
தமிழ்நாடு அரசு இயங்கக்கூடாது என்பதற்காக அண்ணாமலையும் ஆளுநரும் வேலை செய்து வருகிறார்கள். நம்முடைய மாண்புமிகு முதல்வர் கண்ணியமானவர். பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர். யாராக இருந்தாலும் சரியான நேரத்தில் அவர் பதிலடி தருவார். கலைஞரின் பேனா சிலையைப் பார்த்தால் தாங்களும் அவரைப்போல எழுத வேண்டும் என்கிற ஊக்கம் எதிர்கால இளைஞர்களுக்கு வரும். அது குறித்த தவறான தகவல்களை எதிர்க்கட்சியினர் பரப்பி வருகின்றனர். இவர்கள் சொல்வது போல் எந்த பாதிப்பும் அதில் கிடையாது.
3000 கோடியில் படேலுக்கு இவர்கள் சிலை வைத்தபோது மக்கள் பாதிக்கப்பட்டனர். பேனா சிலையால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். திராவிடம் என்றாலே பிடிக்காதவர்கள் செய்யும் பொய் பரப்புரைகளை யாரும் நம்பத் தேவையில்லை. மெரினாவில் பேனா சிலை அமைவதுதான் சாலச்சிறந்தது.