அமெரிக்கவைச் சேர்ந்த பொழுதுபோக்கு மல்யுத்த நிகழ்ச்சி WWEன் மல்யுத்த வீரர் கேன், இவர் இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் பிரபலமான வீரர்களில் ஒருவர். இவர் தற்போது அமெரிக்காவின் டென்னெஸ்ஸீ மாகாணத்தின் க்நோக்ஸ் கவுண்டி என்னும் நகரத்தின் மேயராக நேற்று இரவு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். கேனின் உண்மையான பெயர் க்ளென் ஜாகோப்ஸ். ரிபப்ளிக் என்னும் கட்சி சார்பாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து டெமோக்ரடிக் கட்சியை சேர்ந்த லிண்டா ஹனே போட்டியிட்டார். க்ளென், லிண்டாவைவிட 66 சதவீத வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறார். இவர் இத்தேர்தலுக்கு போட்டியிடுவதற்தாக ஆரம்பகட்ட தேர்தல் கட்சிக்குள்ளே நடக்கும், அத்தேர்தலில் 23 வாக்குகளே பெற்று வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்பும் ரிபப்ளிக் கட்சிதான்.
இந்த வெற்றியைத்தொடர்ந்து அமெரிக்காவில் ஒரு நகரின் மேயாராகும் இரண்டாவது WWE மல்யுத்த வீரராகிறார் கேன். இவருக்கு முன்னர் மின்னசொட்டா மாகாணம், ப்ரூக்ளின் நகரின் மேயராக 1991-1995ஆம் ஆண்டுவரை ஜெஸ்ஸி வென்துரா பதவிவகித்தார். பின்னர், மின்னசொட்டா மாகாணத்தின் கவர்னராகவும் 1999-2003 ஆம் ஆண்டு வரை பதவிவகித்தார்.
க்ளென் ஜாகோப்ஸின் இந்த வெற்றிக்கு முதல் காரணமாக இருப்பது அவர் பிரபலமான மல்யுத்த வீரர் என்பதே. அவர் 1995ஆம் ஆண்டில்தான் முதன் முதலில் WWF(தற்போது WWE) என்று சொல்லப்பட்ட மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டார். தொடக்கத்தில் அவ்வளவு பிரபலமாகாமல் இருந்தவர், 1997ஆம் ஆண்டு கேன் என்ற பெயரில் அதுவும் அண்டர்டேக்கரின் சைக்கோடிக் தம்பி என்று ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, இவரும் பிரபலமாகத் தொடங்கினார். இந்த மல்யுத்த நிகழ்ச்சி வரலாற்றிலேயே அண்டர்டேக்கருக்கும் இவருக்குமான பகை, போட்டி பலரால் பேசப்பட்டிருக்கிறது. அதேபோல இவர்கள் இருவரும் இணைந்தும் டேக் டீம் விளையாடியுள்ளனர். அந்த டேக் டீமின் பெயர் 'பிரதர்ஸ் ஆப் டெஸ்ட்ரக்ஷன்' (அழிவின் சகோதரர்கள்). ’ஸீ நோ ஈவில்’ என்கிற திரைப்படத்தில் நடித்தும் இருக்கிறார்.
பிரபல சூப்பர் ஸ்டார்களான ஸ்டீவ் ஆஸ்ட்டின், ஸ்டோன் கோல்டு, ராக் போன்ற வீரர்களுடன் களத்தில் மோதி வெற்றிபெற்றுள்ளார். அதிக வருவாய் ஈட்டிய வீரரிலும் இவரது பெயர் இருக்கிறது. 'சோக்ஸ் ஸ்லாம்' என்னும் ஸ்மாக் இவர் பாணியாகும், கழுத்தை பிடித்து மேலே தூக்கி கீழே அடிப்பதுதான். கேனின் தேர்தல் பரப்புரைக்காக அண்டர் டேக்கரை அழைத்து பிரச்சாரம் செய்துள்ளார். மேலும், இவரது பிரச்சாரத்தில் குறைந்த வரி, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று முழு அரசியல்வாதியாகவே மாறி உறுதியளித்துள்ளார். மேயர் பதவியில் பிரச்சாரம் செய்து வரும் போதே இந்த ஆண்டு மே மாதத்தில் WWE ல் டேனியல் பிரையனுக்கு உதவியாக சண்டையிட வந்தார். பின்னர் அவருடன் கைகோர்த்து டேக் டீம் சாம்பியன்ஷிப்புக்காக போட்டியிட இருந்தார். இதுவும் ஒரு வகையில் மேயர் தேர்தலுக்கான பிரச்சாரம் என்று சொல்கிறார்கள். இவ்வளவு ஏன் தற்போதைய அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்புமே தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்காக WWEல் கலந்துகொண்டு இருக்கிறார். தமிழக தேர்தல்களில் சினிமாக்காரர்கள் பலர் அரசியல்வாதியாக உருமாறுவதுபோல், வருகின்ற அமெரிக்க தேர்தல்களில் WWE வீரர்களான ஜான் சீனா, ராக் எல்லாம் மாறிடுவாங்களோ...