தமிழர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணங்களாகக் கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் விளங்குகின்றன. இதில் ஓலைச் சுவடிகள் முதன்மையான ஆவணமாகத் திகழ்கின்றன. முற்காலத்தில் ஓலையில் எழுதி சரிபார்க்கப்பட்ட செய்தியே பின்னர் கல்லிலும் செப்பிலும் வெட்டப்பட்டது. இதன் மூலம் ஓலைச்சுவடிகளின் தொன்மை விளங்கும். தமிழகத்தில் பரவலாக ஓலைச்சுவடிகள் கிடைக்கின்றன. ஆனால் அவை திரட்டப்படாமல் அழிந்து வருகின்றன.
இந்நிலையில் நிகழ் காலத்தில் ஓலைச்சுவடிகளைக் கள ஆய்வு செய்து கண்டுபிடித்து, பதிப்பித்து நூலாக்கி வரும் சுவடியியல் அறிஞரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் புதிதாகச் சோழர் வரலாற்றுத் தொடர்புடைய ஒரு ஒலைச்சுவடியைக் கண்டுபிடித்துள்ளார். அந்த சுவடி குறித்து அவர் கூறியதாவது, "ஓலைச்சுவடிகள் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றையும், பண்பாட்டு வரலாற்றையும் தாங்கி நிற்கும் முதன்மை ஆவணங்கள் ஆகும். ஓலைச்சுவடிகள் பழந்தமிழர்களின் அறிவு மரபுத் தொகுதிகளாகவும் விளங்குகின்றன. இத்தகைய அறிவு மரபுச் சிறப்புடைய ஓலைச்சுவடிகள் வழியாகத்தான் சங்கத் தமிழரின் பண்பாட்டுமாண்பு உலகிற்குத் தெரிந்தது. பக்தி இலக்கியச் சுவடிகள் வழியாகத்தான் தமிழரின் இறையியல் கோட்பாடு மீட்டெடுக்கப்பட்டன. பழந்தமிழ் ஓலைச்சுவடிகள் வழியாகத்தான் தமிழரின் கணிதவியல், வானியல், சித்த மருத்துவவியல், சோதிடவியல், மந்திரவியல், ஜாலவியல், வரலாற்றியல், இலக்கியவியல் உள்ளிட்ட பல்வேறு அறிவு மரபுகள் நமக்கு கிடைத்துள்ளன.
தமிழகத்தில் சுவடி நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்கள், சித்த மருத்துவ மையங்கள், கோயில்கள், மடங்கள், ஜமீன்கள், கவிராயர் வீடுகள், தனிநபர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுவடிகள் உள்ளன. தமிழ்ச் சுவடிகள் இந்தியாவில் பல மாநிலங்களில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் கிடைக்கின்றன. உதாரணமாக கேரளப் பல்கலைக்கழகக் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் 5024 தமிழ்ச்சுவடிகள் உள்ளன. பாரிஸ் தேசிய நூலகத்தில் 1500 தமிழ்ச் சுவடிகள் உள்ளன. தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியிலும் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளை திரட்டித் தொகுத்து நூலாக்கப் படாமல் அழிந்து வருகின்றன. அவற்றை மீட்டு நூலாக்கம் செய்ய தமிழ் அறிஞர்கள் முன்வர வேண்டும். இல்லையெனில் அழிந்து பட்ட கணக்கற்ற நூல்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
தமிழ்ச் சுவடிகளைப் படிக்க, படியெடுக்க, பதிப்பிக்கத் தெரிந்தவர்கள் சுமார் 10 பேர் மட்டுமே தமிழகத்தில் உள்ளனர். இளைய தலைமுறையினர் சுவடித்துறையில் ஆர்வம் காட்டாமல் விலகி இருக்கின்றனர். இதனால் விரைவில் தமிழ்ச் சுவடிகளைப் படிக்கத் தெரிந்த நபர்கள் இல்லாது போகும் காலம் விரைவில் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. தமிழ்ச் சுவடிகளைத் தேடித் திரட்டிப் பாதுகாக்கும் எண்ணம் கொண்ட நான் சுமார் 20 ஆண்டுகளாகச் தமிழ்ச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்து வருகிறேன். இதுவரை 56 ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்து நூலாக்கியுள்ளேன். 20 சுவடிகளைத் தொகுத்துப் பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்.
நீண்ட காலமாக இராஜராஜ சோழன் வரலாற்றுச் சுவடியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். அதைக் கண்டுபிடித்துப் பதிப்பித்து தமிழ்ச் சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பது என் கனவு. அதுபோல இராவண மருத்துவச் சுவடி, அகத்தியர் - 12,000 சுவடி, போகர் - 12,000 சுவடிகளையும் தேடி வருகிறேன். மதுரை பகுதியிலிருந்து தமிழரின் யானை மருத்துவச் சுவடிகள் 7, எனது மாணவி செ.பரமேஸ்வரி அவர்களின் உதவியுடன் கண்டுபிடித்து படியெடுத்து நூலாக்கி வருகிறேன். ஆனையின் பிறப்பு, ஆனை வகை, ஆனையை போர்க்களத்தில் பயன்படுத்தும் முறை, ஆனையின் வெளி மற்றும் உள் மருத்துவ முறைகள் முதலிய பல அரிய செய்திகள் சுவடிகளில் காணப்படுகின்றன. ஆனை மருத்துவச் சுவடிகளை எழுதியது அகத்தியர் என்ற குறிப்பு சுவடிகளில் காணப்படுகின்றன. மேலும் ஆனை மருத்துவச் சுவடியை வடமொழியில் மொழிபெயர்த்து வழங்கியவர் பாண்டிய மன்னன் அதிவீரராம பாண்டியன் என்ற குறிப்பும் ஒரு சுவடியில் காணப்படுகிறது.
தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தொகுப்பதையும் நூலாக்கம் செய்வதையும் கடமையாக வைத்துள்ள நான் குமரி மாவட்டப் பகுதியில் கள ஆய்வு செய்தேன். அப்போது கொடுமுட்டி ஊரைச் சேர்ந்த சித்த மருத்துவர் செ.பால் பேக்கர் என்பவரிடம் இருந்து சௌந்தர்ய லகரி உரை, சடாச்சர அந்தாதி, கிருத்தவ இலக்கியம் ஆகியவை அடங்கிய ஒரு ஓலைச்சுவடியைப் பெற்றேன். பின்பு அவரின் உதவியுடன் மாங்கரை சித்த மருத்துவர் மேத்யூ அவர்களிடமிருந்து சோழர்கள் வரலாற்றைப் பேசும் 'வலங்கைமாலை' எனும் சுவடியைப் போட்டோ நகலியாக எடுத்து சேகரித்தேன். இந்நூலை எழுதியவர் மானாடு சுந்தரம் ஆவார். இந்நூல் இயற்றப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு ஆகும். இந்நூல் கரிகால் சோழன், குலோத்துங்க சோழன் பற்றிய வரலாற்றுச் செய்திகளைப் பேசுகின்றது. மேலும் வலங்கைச் சான்றோர் எனும் உய்யக்கொண்டார் நாடார்களின் வரலாற்றையும் விரிவாக கூறுகிறது. சுவடியில் உள்ள வரலாறுகள் நிகழ்ந்த காலம் கி.பி.11 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
அதன் பின் சென்னையில் எழுத்தாளர் தி. மைதிலி, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த வி.ஆர்.கே. சிதம்பரம் செட்டியார் என்பவரிடமிருந்த காரைக்குடி வணிகர்களின் வணிகம் தொடர்பான 5 ஓலை ஆவணக்கட்டுகள் பெற்றுத் தந்தார். இந்த ஓலைச்சுவடி ஆவணங்கள் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஓலை ஆவணங்களில் வட்டிக்கு பணம் வழங்கியமை, நிலங்களை அடமான பத்திரமாக எழுதி வாங்கியது உள்ளிட்ட பல செய்திகள் காணப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து வரும் தனிநபர்கள் அரிய சுவடிகளை வைத்திருந்தால் அவற்றைப் பதிப்பித்து நூலாக்கிட தந்து உதவுமாறு வேண்டுகோள்" விடுத்தார்.