பாகிஸ்தானில் நடந்த பொது தேர்தலில் மொத்தம் 342 இடங்கள் உள்ளன, அதில் 272 தேர்தல் உறுப்பினர்கள் மூலம் தேர்தெடுக்கப்படுகின்றனர். கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 270 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்றைய நிலவரப்படி 260 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 115 இடங்களில் கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 62 இடங்களும், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 43 இடங்களும் கிடைத்துள்ளன. ஆட்சியமைக்க 137 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் சிறிய கட்சிகள், சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளார். வாருங்கள் இவரை பற்றி பார்ப்போம்....
"நான் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். நான் என்னை ஒரு சாதாரண வீரனாக எப்போதும் எண்ணியது இல்லை" இவ்வாறு 1992 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற பின் இம்ரான் கான் கூறுகிறார். பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்லுமா என்று எல்லோரும் எண்ணியபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து, அணியை சரியாக ஒருங்கிணைத்து வெல்ல வைத்தவர். கிரிக்கெட்டராக எல்லோர் மனதையும் கவர்ந்தவர், பின்னர் அரசியல்வாதியாக உருமாறினார் . 1996ஆம் ஆண்டு, தெக்ரிப் இ இன்சாப் என்னும் கட்சியை நிறுவினார். தெக்ரிப் இ இன்சாப் என்றால் நீதிக்கான இயக்கம் என்பதாகும். 1996 ஆம் ஆண்டில் இந்த கட்சியை துவங்கியிருந்தாலும், பாகிஸ்தானின் மிகப்பெரிய கட்சிகளான ந-பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் பாகிஸ்தான் பீப்பள் கட்சி ஆகிய இரு கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்க இம்ரான் கானின் கட்சிக்கு பல வருடங்கள் எடுத்துக்கொண்டது. அதாவது கட்சி தொடங்கிய காலகட்டத்தில் இருந்து சாதாரணகட்சியாகவே இருந்துவந்த நிலையில் 2013ஆம் ஆண்டில் மூன்றாம் கட்சியாக தேர்தலில் வெற்றிபெற்றது இம்ரானின் தெக்ரிகப் இ இன்சாப்.
2002 ஆம் ஆண்டில் நடந்த பொது தேர்தலில் வெற்றிபெற்ற இம்ரான் கான் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராகிறார். 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக தேர்வானார். இந்த நேரம் கொஞ்சம் கூடுதலாக அவருக்கு ஒரு சலுகை கிடைத்தது. இம்ரானுடைய கட்சி பாகிஸ்தானின் இரண்டாவது அதிக வாக்குகள் பெற்ற கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. இப்படி ஒரு அந்தஸ்தை அக்கட்சி பெற்றதும், அடுத்த முறை கண்டிப்பாக அவர்களின் கட்சி வெற்றிப்பாதையை கடக்கும் என்று பல்வேறு தரப்பினர்களால் சொல்லப்பட்டது. அதை உண்மையாக்கும் வகையில், தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட வரையில் முன்னிலையில் இருக்கிறது இவரது கட்சி.
இம்ரான் கான் இந்த நிலைக்கு வந்ததற்கு முக்கிய காரணமாக இருப்பது என்ன என்றால், முதலில் அவர் ஒரு நடைமுறைவாதியாக இருப்பதுதான். மேலும் பாகிஸ்தானில் உள்ள அனைத்து கட்சிகளும் மதவாதத்தையும், தீவிரவாத்தையும் மட்டும் பிரச்சார யுக்திகளாக பயன்படுத்தியபோது. இம்ரான் பாகிஸ்தான் மக்களுக்கு சராசரி வெறுப்பாக இருக்கும் ஊழல், வறுமை, சுகாதாரம், கல்வி இவை அனைத்தையும் பற்றி பிரச்சாரம் செய்தார். பாகிஸ்தான் மக்கள் எதிர்பார்த்த வகையிலேயே தன்னுடைய பிரச்சாரத்தை முன் வைத்தார். புதிய பாகிஸ்தானை உருவாக்குவேன் என்று ஒவ்வொருவர் மனதிலும் ஆணி அடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். மேலும், இம்ரான் கானின் இந்த வெற்றிக்கு முக்கிய பாகிஸ்தானின் உளவுத்துறையும், இராணுவமும்தான் என்கின்றனர். பொறுத்து இருந்து பாகிஸ்தானில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்று பார்ப்போம், இம்ரான் கான் தான் ஆட்சி அமைப்பார் என்று சொல்கிறார்கள் இருந்தாலும் அரசு முடிவுகள் இன்றுவரை வரவில்லை... யார் அங்கு வெற்றிபெற்றாலும் இந்தியாவுடன் அவர்கள் உறவு எவ்வாறு இருக்க போகிறது என்பதுதான் நமக்கு முக்கியமானது.