ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவிய சந்திரயான் மூன்று என்ற விண்கலத்தின் திட்ட இயக்குநராக இருந்தவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் (42). இவருடைய தந்தை பழனிவேல், தாயார் ரமணி. இவரது தந்தை தென்னக ரயில்வேயில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்கள் குடும்பம் விழுப்புரத்தில் வசித்து வருகிறது. வீரமுத்துவேல் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். அதனைத் தொடர்ந்து அவர் விழுப்புரத்தில் உள்ள ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் படிப்பை முடித்தார்.
அதன் பின்னர் திருச்சி ஆர்.இ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் எம்.இ. மெக்கானிக்கல் படிப்பை முடித்தார். பிறகு சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து பயற்சி பெற்றார். அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் இவருக்கு பணி கிடைத்துள்ளது. தற்போது சந்திராயன் மூன்று திட்ட இயக்குநராக பதவி உயர்வு பெற்று சந்திரயான் மூன்று என்ற விண்கலத்தை செலுத்தும் அளவிற்கு இவரது ஆராய்ச்சி படிப்பு உதவியிருக்கிறது. ஏற்கனவே 2008ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் சந்திராயன் ஒன்று என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் அந்த செயற்கைக்கோள் தோல்வியில் முடிந்தது.
நிலவு ஆராய்ச்சியில் தலைமை தாங்கப்போகும் இந்தியா
அதன் பிறகு 2019ஆம் ஆண்டில் சில தொழில்நுட்பங்களைப் புதிதாகப் புகுத்தி சந்திரயான் இரண்டு என்ற விண்கலம் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பு அதன் ரோவர் கருவி கீழே விழுந்ததால் வெடித்து சிதறியது. இதனால் இரண்டாவது விண்கலமும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டில் வீரமுத்துவேல் இஸ்ரோவில் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை தயாரித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் சமர்ப்பித்தார். அதில், விண்கலத்தில் உள்ள ரோவர் எப்படி தரை இறங்க வைக்கும், அதை எப்படி இயக்குவது என்பது குறித்து தெளிவான தொழில்நுட்ப கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளார். இந்த கட்டுரையை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழு, அவரது கட்டுரையை ஏற்றுக் கொண்டது. அதன் பிறகு திட்டக்குழு இயக்குநராக வீரமுத்துவேலை இஸ்ரோ நியமித்தது.
அதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் சக விஞ்ஞானிகள் ஒத்துழைப்போடு சந்திரயான் மூன்று விண்கலம் தயாரிக்கப்பட்டு ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இறங்கி சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே நிலவிற்கு விண்கலம் அனுப்பியுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் நான்காவது நாடாக இந்தியா இடம்பெற்றுள்ளது. குறிப்பாக உலகிலேயே நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா சாதனையை படைத்துள்ளது.
ஒரு ரயில்வே ஊழியரின் மகன் படித்து இஸ்ரோ விஞ்ஞானியாகி அதன் திட்ட இயக்குநர் பதவி வரை உயர்ந்து சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக வீரமுத்துவேல் திகழ்கிறார்.