ஆட்சிக் காலம் முடிவதற்குள் அதிகாரத்தை அனுபவிக்கவேண்டும் என்கிற ஆசை, கட்சி பதவியிலுள்ள சீனியர்களுக்கும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் வந்துவிட்டது. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சேர்மன் பதவியையும், துறை சார்ந்த வாரிய பதவிகளையும் குறி வைத்து எடப்பாடியிடம் அடம் பிடிக்கத் துவங்கியுள்ளனர். வடசென்னையில் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், அவைத்தலைவர் மதுசூதனனுக்குமான நீண்டகால பகை, கூட்டுறவு சங்கத்தேர்தலில் மோதலாக வெடிக்க, எடப்பாடியிடம் மதுசூதனன், "வட சென்னையில் நான் இருக்கணும் அல்லது ஜெயக்குமார் இருக்கணும். யார் வேணும்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க. ராயபுரத்தைத் தாண்டி வட சென்னையில் அவர் அரசியல் செய்யக்கூடாது, உடனடியாக வாரியத்தை உருவாக்கி எனக்கும் என்னைப் போல கட்சியின் சீனியர்களுக்கும் பதவி தர வேண்டும். நீங்க மட்டுமே அனுபவிக்கணும்னு நினைக்காதீங்க. நான் நினைச்சேன்னா கட்சியில எதையும் செய்யலாம். தேர்தல் ஆணையம் என்னிடத்தில்தான் கட்சியையும் சின்னத்தையும் ஒப்படைச்சிருக்கு' என ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் கொட்டித்தீர்த்துள்ளார். தவித்த எடப்பாடி, கடைசியில் வாரியப்பதவி பற்றி உறுதி அளித்துள்ளார்'' என்கிறார்கள்.