சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்த மூத்த தலைவரும் சரத் பவாரின் சகோதரரின் மகனுமான அஜித் பவார் தனது ஆதரவாளர்களான 9 எம்.எல்.ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி, அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. மகாராஷ்டிராவில் முதலில் சிவசேனா கட்சியை உடைத்த நிலையில், அடுத்ததாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் உடைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பாலுவை நாம் சந்தித்து பேசினோம். அதில் சில கேள்வி, பதில்கள் பின்வருமாறு...
மகாராஷ்டிராவில் சரத் பவார் கட்சியை பிளவுபடுத்திய பாஜக செயல்களை எப்படி பார்க்கிறீர்கள்?
இது போன்ற செயல்களை செய்வது பா.ஜ.க.வினுடைய டி.என்.ஏ.வில் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை திருடுவது ஒரு குலத்தொழிலாகவே வைத்திருக்கிறது பா.ஜ.க. கட்சி. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் பா.ஜ.க. கிட்டதட்ட 30 வருடங்களாக கூட்டணி வைத்திருக்கிறார்கள். அங்கு தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்தார். அவர் முதல்வரான ஓரிரு நாட்களில் இதே அஜித் பவார் அந்த கட்சியில் பிரச்சனைகளை உண்டாக்குகிறார். அதன் பின் அஜித் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரை சரத் பவார் அழைத்து காங்கிரஸ் கட்சியோடு இணைந்து ஆட்சி அமைக்கிறார். அங்கே ஒரு ஏக்னாத் ஷிண்டேவை உருவாக்கி சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்தார்கள். சிவசேனா, பா.ஜ.க. கட்சியுடன் 30 வருடங்களாக கூட்டணி வைத்ததன் விளைவு இன்று தங்களது சொந்த கட்சியையும் சின்னத்தையும் இழந்து விட்டு உச்சநீதிமன்றத்தில் நின்றுகொண்டிருக்கிறது.
சரத் பவார் அனைத்து இந்திய எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ஆதரவு தந்து வயது மூப்பின் காரணமாக தேசிய அரசியலுக்கு நகரத் திட்டமிட்டு கட்சிக்கு புதிய தலைமையை உருவாக்குகிறார். அதன்படி தனது மகள் சுப்ரியா சுலேவுக்கு பதவியை கொடுத்து விட்டு கட்சியில் தனது அண்ணன் மகன் அஜித் பவாருக்கு பொறுப்பை கொடுக்கிறார். இதனிடையில், அஜித் பவார் தனது 45 எம்.எல்.ஏ.க்களை கூட்டிக்கொண்டு பாஜகவில் சேர்ந்து துணை முதல்வர் பதவி வாங்கி இருக்கிறார். அவருடன் பதவி ஏற்றிருக்கும் 8 எம்.எல்.ஏக்களில் அஜித் பவார் உள்பட 5 எம்.எல்.ஏக்கள் மீது அமலாக்கத்துறையின் நிழல் பதிந்திருக்கிறது என்று அனைத்து செய்தித்தாள்களிலும் வந்திருக்கிறது.
அஜித் பவார் மீது போடப்பட்ட வழக்கு என்பது சர்க்கரை ஆலை வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் சார்ஜ் சீட்டில் அமலாக்கத்துறை வேண்டுமென்றே அவருடைய பெயரை சேர்க்கவில்லை. அதன் பின்பு, ஹசன் முஸ்ரிப் என்பவர் இக்பால் என்ற போதை பொருள் கடத்தல் மன்னனிடம் தொடர்பு வைத்திருந்ததாக 2016 இல் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கை இன்றைக்கு வரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போல், சகன் புஸ்பால், தனஞ்செய் முண்டே ஆகியோர் மீதும் வழக்கு இருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அதை கிடப்பில் போட்டுள்ளார்கள். ஆக, இவர்கள் மீது அமலாக்கத்துறையின் நிழல் படிந்து இருக்கிறது என்று ஆங்கில நாளிதழ்களில் வெளிவந்திருக்கிறது.
இவர்கள் யார் உத்தமர்கள் என்ற கேள்வி வருகிறது. பாஜக கட்சியில் இருந்தால் வழக்கு போடமாட்டார்கள். இல்லையென்றால் வழக்கு போட்டு கைது செய்து விடுவோம் என்ற கூறியதன் பேரில் தான் இந்த கட்சி பிளவு. இதே போல் தான் மேற்கு வங்காளத்திலும் நடந்தது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களில் இவர்கள் செல்லும் போது அமலாக்கத்துறை மூலம் வழக்கு போடுகிறார்கள். ஆனால், கர்நாடகா போன்ற மாநிலங்களில் அவர்கள் சார்ந்த கட்சியினர் மீது வழக்கு போடப்பட்டிருந்தாலும் அவர்கள் உடனடியாக வெளியே வருகிறார்கள்.
ஈஸ்வரப்பாவுக்காக ஒருவன் தற்கொலை செய்து இறந்தாலும் அவரை குற்றமற்றவர் என்று சொல்வது. அந்த குற்றமற்றவர் என்று சொன்னதற்கு பின்னால் மேல்முறையீடு செய்யமாட்டார்கள். ஆ.ராசா தன்னுடைய வழக்கில் தானே வாதாடி வெளியே வந்ததற்கு பின்னால் இதை விட்டுவைக்கக் கூடாது என்று மேல்முறையீடு செய்கிறார்கள். ஆக, இது உண்மையான அரசியல் சாணக்கியத்தனம் என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கிற அயோக்கியத்தனமாகத் தான் பார்க்க முடிகிறது. மேலும் தூய்மையானவர்களை வைத்து அரசியல் நடத்தினால் வாழ்த்துகின்ற முதல் குரல் நம்முடையதாகத் தான் இருக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட யாரை எடுத்துக் கொண்டாலும் குற்றப் பின்னணி உள்ளவர்கள் எத்தனை சதவீதம் என்று பார்த்தால் பாஜக கட்சியில் தான் அதிகம் இருக்கிறது.
மகாராஷ்டிராவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதற்கு மோடியும் அமித்ஷாவும் காரணம் என்று வெளிப்படையாக அண்ணாமலை கூறுகிறாரே?
கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் கைதட்டுவதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை குமரி மாவட்டத்தில் பேசுவதற்கான காரணம் அங்கு செல்வாக்கு அதிகம் இருப்பதனால் தான். அதனால் இந்த மாவட்டத்தில் வெற்றி பெறும் பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள். தேர்தல் நேரத்தில் எல்.முருகன் மீது பாஜகவை சார்ந்தவர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். அவர் இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார். அதே போல் தேர்தலில் வெற்றி பெறாத தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக இருக்கிறார். பாலியல் குற்றச்சாட்டு பெற்ற சண்முகநாதன் மாநிலத்தின் ஆளுநராக இருந்து விலக்கப்படுகிறார். இது போல் அவர்கள் கட்சிக்கு பல வரலாறு இருக்கிறது. இவர்கள் அடாவடித்தனத்தை கையில் வைத்து கொண்டு எந்த தேர்தலிலும் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டு ஆட்சி அமைக்காமல் அடுத்தவர் வைத்திருக்கும் உறுப்பினர்களை மிரட்டி பாஜக கட்சியில் சேர்க்கிறார்கள். இதன் மூலம் அந்த மாநில கட்சியின் அடையாளத்தை அழித்து ஒற்றை கலாசாரத்தை கொண்டு வருவதற்கு தான் இவ்வளவு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.
பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்ட சரத் பவார் கட்சியை போல் கூட்டத்தை ஏற்பாடு செய்த நிதிஷ் குமார் கட்சியையும் உடைக்கப் போகிறார்கள் என்று செய்தி வருகிறதே?
கர்நாடகா தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு பின்னால் பாஜகவுக்கு பயம் வந்து விட்டது. ராகுல் காந்தி நடைபயணத்திற்கு பின்னால் தன்னுடைய தவறுகளை திருத்திக்கொண்டு மிகப் பெரிய தலைவராக உருவெடுத்திருக்கிறார் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. மாநிலத்தை காப்பாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். சந்திரசேகர ராவ் போன்றோர்கள் தங்களை அகில இந்திய தலைவராக உணர்ந்ததால் தான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே, தாங்கள் இந்த மாநிலத்தில் இருக்க விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். 10 சட்டமன்ற உறுப்பினர்கள், ‘நாங்கள் இந்த முதல்வரின் கீழ் இருக்க விரும்பவில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், மணிப்பூர் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கையில் நமது பிரதமர் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பீகார் போன்ற பெரிய மாநிலங்களில் பாஜக பெரிய அளவில் இல்லை. இதன் மூலம், இவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற 300 இடங்களில் 100 இடங்கள் மட்டும் கிடைத்துவிட்டால் ஆட்சி அமைப்பதற்கு சிக்கல் ஆகிவிடும். அதனால், அமலாக்கத்துறை மூலம் பலரையும் மிரட்டி வருகிறார்கள். இதன் அடிப்படையில் கூட்டத்தை ஒன்றிணைத்த நிதிஷ் குமாருக்கு குடைச்சல் கொடுப்பார்கள். கூட்டத்திற்கு தமிழகம் ஒத்துழைப்பு கொடுத்ததால், அடுத்து நடத்தவிருக்கும் பெங்களூர் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றால் போராட்டம் நடத்துவோம் என்று அண்ணாமலை பேசுகிறார். கர்நாடகாவில் மேகதாது அணை அமைப்போம் என்று பாஜக ஆட்சியில் இருந்த போது கூறினார்கள். ஆனால் அங்கு மறியல் செய்யாமல் இங்கே தமிழ்நாட்டில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். அதனால் இவர் பேசுவது சின்னபிள்ளை தனமாக இருக்கும்.
பீகார் மாநிலத்தின் துணை முதல்வராக இருந்தவர் தற்போது பாஜகவில் உள்ளார். அவர் தற்போது, ‘நிதிஷ் குமார் கட்சியை நாங்கள் பிரித்து விடுவோம்’ என்று பேசியிருக்கிறார். அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் வென்று ஆட்சியை பிடிப்பது என்பதை விட மாநில கட்சியை பிரித்து ஆட்சி அமைப்பது தான் அவர்களது ஒரே நோக்கம். அதிலும், நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டால் அது மோடியுடைய தோல்வியாக பார்க்கப்படும். அந்த நிலைமை வந்துவிட்டால், இந்தியாவிற்கு இவர்கள் கொண்டுவரவிருக்கும் அரசியலமைப்பு திருத்த சட்டம், ஒற்றை கலாசாரம் போன்ற இவர்களுடைய முயற்சிக்கு இடைஞ்சல் வந்து விடும் என்பதற்காக பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார்கள். அப்படி ஆட்சியை பிடிப்பதற்கு முதலில் இவர்களுடைய கூட்டணி கட்சியை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இது போன்று செய்கிறார்கள். எந்த அரசியல் இயக்கமாக இருந்தாலும் அராஜகத்தை மட்டும் கையில் வைத்து கொண்டு வென்றது என்பது உலக வரலாற்றில் இதுவரை நடந்தது இல்லை.