தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இன்று மும்பையில் உயிரிழந்தார். இந்தச் செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் ஒரு கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இர்ஃபான் கான் பல ஆண்டுகள் கடின உழைப்பிற்குப் பிறகு 1988- ஆம் ஆண்டு 'சலாம் பாம்பே' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் தனது நடிப்பின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைச் சம்பாதித்து வைத்திருந்தார், இர்ஃபான் கான். பாலிவுட் மட்டுமல்லாமல் தென்னிந்தியத் திரைப்படங்கள், ஹாலிவுட் படங்கள் எனப் பல படங்களில் தன்னைச் சிறந்த நடிகராக நிரூபித்தவர் இவர். இந்தச் சூழலில் கடந்த மார்ச் 2018- ல் தனக்கு நியூரோஎண்டோகிரைன் என்ற அரியவகை புற்றுநோய் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் இர்ஃபான் கான் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பொதுவாக நியூரோஎண்டோகிரைன் புற்றுநோய் என்பது மனிதனின் நுரையீரல், கணையம், குடல் பகுதிகளில் ஏற்படும் அரியவகை கட்டி ஆகும். செல்களில் அதிகப்படியான பெருக்கத்தால் உருவாகும் இந்தவகை புற்றுநோய் மனித உடலிலேயே பல வருடங்கள் வளரக்கூடியது. ஆனால், அறிகுறிகள் எதுவும் எளிதாகத் தென்படாது என்பதால் இதனை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவது கடினமானதாக உள்ளது. மேலும், உடலின் ஒரு பகுதியில் தோன்றும் இந்த புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கும் மெல்லப் பரவ ஆரம்பிக்கும். எனவே இதனைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டால் சிகிச்சையளிப்பது சிரமமாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இப்படிப்பட்ட அரியவகை புற்றுநோயுடன் கடந்த சில வருடங்களாகப் போராடிவந்த இர்ஃபான் கான், இதற்காகப் பிரிட்டன் மற்றும் இந்தியாவில் தொடர் சிகிச்சைகளைப் பெற்று வந்தார். கடந்த 25 ஆம் தேதி ராஜஸ்தானிலிருந்த இவரது தாயார் உயிரிழந்த நிலையில், கரோனா ஊரடங்கால் அவரது இறுதிச் சடங்கைக் கூடச் செய்யமுடியாத நிலைக்கு ஆளானார். இந்நிலையில், குடல் தொற்று ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்து இர்ஃபான் கான் மும்பையின் கோகிலாபென் திரிபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புற்று நோய் காரணமாக அதிகமாகப் படங்களில் நடிக்காமலிருந்த அவர் பிரிட்டனில் சிகிச்சையிலிருக்கும்போது நடித்த 'அங்க்ரேஸி வழி' திரைப்படம் ஊரடங்குக்கு முன் கடைசியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. லைப் ஆஃப் பை, ஜுராசிக் பார்க் உள்ளிட்ட பல ஆங்கில படங்களிலும் லஞ்ச் பாக்ஸ், தல்வார், ஹிந்தி மீடியம் உள்ளிட்ட பல சிறந்த இந்தியத் திரைப்படங்களிலும் நடித்த இவருக்குக் கடந்த 2011 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு. நடிகர் என்பதைக் கடந்து பல சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திவந்த இர்ஃபான் கான், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் முதல்தர கிரிக்கெட் வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.