"டி.என்.பி.எஸ்.சி, டி.ஆர்.பி., எம்.ஆர்.பி உள்ளிட்ட அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் 'ரொட்டேஷன் ரோஸ்டர்' எனப்படும் இனசுழற்சி அடிப்படையில் சீனியாரிட்டியை வழங்கக்கூடாது. இடஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில்தான் சீனியாரிட்டி வழங்கப்படவேண்டும்" என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத தமிழக அரசுக்கு சமீபத்தில் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம். ஆனாலும், பத்திரப் பதிவுத்துறையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சீனியாரிட்டியை வழங்காமலேயே இன சுழற்சி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தயாரித்திருப்பது பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
தமிழக அரசு கடைப்பிடிக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்றிதான் மதிப்பெண் அடிப்படையில் அனைத்துத் துறை அரசுப் பணிகளுக்கும் அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிறகு, அதே இட ஒதுக்கீடு மதிப்பெண் பட்டியலைப் பின்பற்றிதான் சீனியாரிட்டி (முதுநிலைப்பட்டியல்) மற்றும் புரமோஷன் (பதவி உயர்வு) வழங்கப்படுகிறது.
ஆனால், பத்திரப் பதிவுத்துறை, வணிக வரித்துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்று துறைகளில் மட்டுமே இட ஒதுக்கீடு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்தபிறகு அதே இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சீனியாரிட்டியை வழங்காமல், ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி முறையில் சீனியாரிட்டியை வழங்கிய பிறகுதான், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் புரமோஷன் வழங்கப்படுகிறது.
இதனால், இட ஒதுக்கீட்டு அடிப்படையிலேயே அதிக மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர்கள்கூட பத்திரப் பதிவுத்துறை, வணிக வரித்துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்றுதுறைகளில் மட்டும் ரொட்டேஷன் ரோஸ்டரால் சீனியாரிட்டியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.
உதாரணத்துக்கு, 2012ஆம் ஆண்டு 320 அரசு காலிப்பணியிடங்களுக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதிய 7 லட்சத்துக்கு மேற்பட்டவர்களில் இட ஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில், முதல் ரேங்கில் பணியில் சேர்ந்த ஒருவர், ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி அடிப்படையில் சீனியாரிட்டியில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பதவி உயர்வுபெறும் தகுதியை இழக்கிறார்.
ஆனால், 2 லட்சத்துக்குமேற்பட்ட ரேங்கில் இருந்தவர் 320-வது ரேங்கிற்குள் வந்து பணியில் சேர்ந்து ரொட்டேஷன் ரோஸ்டரால் சீனியாரிட்டிலியிலும் முன்னுக்கு வந்து தற்போது பதவி உயர்வுக்கும் தகுதி பெற்றுவிட்டார்.
இதனால், இட ஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்று பத்திரப் பதிவுத்துறை, வணிக வரித்துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்றுதுறைகளில் சீனியாரிட்டி கிடைக்காதவர்கள் ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தொடர்ந்தார்கள். இதனை, விசாரித்த உயர்நீதிமன்றம் ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி பட்டியலின்படி சீனியாரிட்டி வழங்கக்கூடாது என்று 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனை, எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை, விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து ஏற்கனவே உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை 4 வாரத்திற்குள் அமல்படுத்துமாறு உத்தரவிட்டுவிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்தாததால்தான் தலைமைச் செயலாளர், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், நிர்வாக சீர்திருத்தத்துறைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது நீதிமன்றம்.
இந்நிலையில்தான், பத்திரப்பதிவுத்துறையில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை அமல்படுத்தி சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்காமலேயே இனசுழற்சியைப் பின்பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக புரமோஷனுக்கான தற்காலிகப் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புரமோஷனுக்கு தலா 10 லட்ச ரூபாய் முதல் 25 லட்ச ரூபாய்வரை பேரம் பேசப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது” என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. சங்கரை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, “இன சுழற்சியைப் பின்பற்றி சீனியாரிட்டியை வழங்கக்கூடாது என்ற வழிமுறைகளை இன்னும் தமிழக அரசு வழங்கவில்லை. மற்ற துறைகளிலும் ஆலோசித்து வழங்கப்படும் அரசின் வழிமுறைகளுக்காகக் காத்திருக்கிறோம். 20 சதவீத எம்.பி.சி. இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவின்படி அரசாங்கம் வழிமுறைகளைக் கொடுத்துவிட்டதால், புரமோஷன் பட்டியலை தயாரித்திருக்கிறோம். அதுவும், இது தற்காலிக புரமோஷன் பட்டியல்தான். ஒருவேளை, இன சுழற்சி அடிப்படையில் சீனியாரிட்டியை தீர்மானிக்காமல் இட ஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டியைப் பின் பற்றவேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாங்கம் கொடுத்துவிட்டால் தற்காலிக புரமோஷனை திரும்பப் பெற்றுவிடுவோம் என்ற நிபந்தனைகளோடுதான் பட்டியல் தயாரிக்கப்பட்டு புரமோஷன் வழங்கப்பட இருக்கிறது” என்றவரிடம், ‘ஒரே நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் வந்துள்ளன. அதுவும், இன சுழற்சி அடிப்படையில் சீனியாரிட்டியை வழங்கக்கூடாது என்றும் இட ஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டியை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டதோடு, குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்தாத தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.
அத்தீர்ப்பின்படி சீனியாரிட்டியைப் பின்பற்றிய பிறகு, உச்சநீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பின்படி 20 சதவீத எம்.பி.சி இட ஒதுக்கீட்டில் நிரந்தரமாகவே புரமோஷன் கொடுத்துவிட்டால் மீண்டும் குழப்பங்கள் வராதே? தற்காலிக புரமோஷன் கொடுத்துவிட்டு பிறகு, அதைப் பிடுங்கிக்கொண்டால் மீண்டும் அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படுமே, மீண்டும் குழப்பங்கள் தொடருமே?' என்று நாம் கேட்டபோது, “நீங்கள் சொல்வதுபோல் செய்வதுதான் நிரந்தரத் தீர்வு. ஆனால், வழிமுறைகள் வரும்வரை காலதாமதம் ஆகிவிடும். நான்கு மாதங்களே உள்ளன. தேர்தலும் வந்துவிடும்” என்றவரிடம், “அப்படியென்றால் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக எம்.பி.சி. மக்களை ஏமாற்றுவதுபோல் அல்லவா இருக்கிறது?” என்றபோது, “அப்படியெல்லாம் இல்லை. நாளையே, இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சீனியாரிட்டியை தீர்மானித்துவிட்டு பதவி உயர்வை வழங்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டால் அதன்படி செய்வோம். அதேபோல், 20 சதவீத இட ஒதுக்கீட்டின்படி புரமோஷன் வழங்க எங்கள் பெயரை பயன்படுத்தி லஞ்சம் பேரம் நடத்தி வசூலிப்பது தவறு. எங்கள் துறைக்கும் வசூலுக்கு எந்த தொடர்புமில்லை” என்றார் விளக்கமாக.
இன சுழற்சி அடிப்படையில் சீனியாரிட்டியை தீர்மானிக்காமல் இட ஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி மற்றும் புரமோஷன்கள் வழங்கப்படவேண்டும் என்று வழக்கு தொடுத்தவர்களோ, “எம்.பி.சிக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி அமல்படுத்துவதை யாரும் எதிர்க்கவில்லை. காரணம், அது அவர்கள் பலவருடங்களாகப் போராடி பெற்ற உரிமை. ஆனால், சீனியாரிட்டி பட்டியல் தயாரித்துவிட்டுதான் புரமோஷன் பட்டியல் தயாரிக்கவேண்டும் என்பது விதிமுறை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி இட ஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்துவிட்ட பிறகு, 20 சதவீத இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வை வழங்கவேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. ஆனால், உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பைக் கண்டுகொள்ளாமல் பணம் பேரம் நடத்தி மற்றொரு தீர்ப்பை மட்டும் அமல்படுத்தி எம்.பி.சி. மக்களை ஏமாற்றக்கூடாது” என்கிறார்கள்.
ஓட்டுக்காகவும் நோட்டுக்காவும் மக்களைக் குழப்பி ஏமாற்றாமல் உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் அமல்படுத்தி நேர்மையான சீனியாரிட்டிகளையும் புரமோஷன்களையும் வழங்கவேண்டும் அதிமுக அரசு.