தமிழக அரசியலில் ஆர்வம் உள்ள அனைவரும் சசிகலாவின் நாமத்தை ஒரு முறையாவது இன்று உச்சரித்திருப்பர். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, 08.02.2021 அன்று சென்னை திரும்ப இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு டி.டி.வி.தினகரன் அறிவித்தார். அவ்வளவுதான் தமிழக அரசியலில் சவுதியின் வெப்பம் தகித்தது.
கடந்த சில தினங்களாக, வரலாற்றில் காணக் கிடைக்காத பல அற்புதச் சம்பவங்களைத் தமிழகம் கண்டுகொண்டிருக்கிறது. சசிகலா வருகையால் சட்டம் ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்படும் என டி.ஜி.பி. அலுவலகம் சென்ற அமைச்சர்கள், 'அண்ணே நீங்க சொல்லுங்க; இல்ல, நீங்க சொல்லுங்க' என மாறி மாறி பிரஸ் மீட்டில் அலப்பறையைக் கூட்டினர். ஒரு வழியாகப் பேசத் தொடங்கிய அமைச்சர் ஜெயக்குமார், "நம்ம சட்ட அமைச்சர் இப்ப பேசுவார்" என அவரை நைசாகக் கோர்த்துவிட்டார். ஒரு வழியாகப் பேட்டியை முடித்துக்கொண்டு திரும்பியபோது அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பத்திரிகையாளர்களுக்கு சாபம் விட்டுச் சென்றது நெட்டிசன்களுக்கு நல்ல மீம் டெம்ப்ளேட் ஆகிப்போனது.
'புரோட்டோகாலை' மீறி அமைச்சர்களே டி.ஜி.பி அலுவலகத்துக்கு புகார் தரச் சென்றது, திறப்புவிழா நடத்திய ஜெ'வின் நினைவிடத்துக்கு உடனே பூட்டுப் போட்டது, தலைமை அலுவலகத்தில் போலீஸைக் குவித்தது, சசிகலா வருகையை ஒட்டி ஒபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது, '100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என சசிகலா தரப்பில் மிரட்டுவதாக' அமைச்சர் கூறியது, சசிகலாவுக்கு வாழ்த்து பேனர் வைப்பவர்களைக் கட்சியை விட்டு நீக்குவது என, ஒரு தனி மனிதரை எதிர்க்க அரசாங்கம் பட்ட பாடு சொல்லில் அடங்காது. ஆனாலும், பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி அண்ட் கோ, சசி வருகையைத் தடுக்கப் பல்வேறு பகிரத பிரயத்தனங்களை மேற்கொண்டனர். எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்து தமிழகம் வந்துவிட்டார் சசிகலா. வரும் வழியில், காரில் அதிமுக கொடி பறந்தது, சில கோவில்களுக்குச் செல்லும்போது அதிமுக கட்சித் துண்டை சசிகலா போட்டிருந்தது ஆகியவை ஆளும் தரப்பை பதறச் செய்தது.
சசிகலாவின் வருகையைப் பற்றி அவரின் நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்தோம். சசிகலாவின் பயணத் திட்டத்தையும் அதற்கான முன்னேற்பாடுகளையும் பற்றி அவர்கள் கூறுகையில், "சசிகலா, காலையில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பிறகு, வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மற்றும் மருத்துவர் வெங்கடேசன் தலைமையில் இரண்டு டீம்கள் பிரிக்கப்பட்டன. சசிகலாவின் பயணத்தின்போது, சற்று முன்பாகவே இந்த இரண்டு டீம்களின் கார்களும் சென்று சட்டச் சிக்கல்களை சரி செய்யும் பொருட்டு பயணத் திட்டம் வடிவமைக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்தது போலவே, சசிகலாவின் காரில் அதிமுகவின் கொடிகட்டக் கூடாது என போலீசார் வாக்குவாதம் செய்தனர். அதன்படி, முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதிமுகவின் ஒன்றியச் செயலாளரின் காரில் சசிகலா பயணித்தார். அப்போது, 'எனது காரில் எனது கெஸ்ட் வருகிறார். இதைக் கேட்க எந்த உரிமையும் உங்களுக்கு இல்லை' என அதிமுக ஒன்றியக் கவுன்சிலர் கூறியுள்ளார். இதனால், வாயடைத்துப் போன காவல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். மேலும், சசிகலா பயணிக்கும் ஃபேன்சி எண் கொண்ட அந்தக் கார் அவரின் நெருங்கிய உறவினர் ஒருவருடையது. எனவே, எத்தனை தடுப்புகள் போட்டாலும் தகர்த்தெறிந்து வெளியே வருவார் சசிகலா" என்று முடித்தனர்.
அதேபோல, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு பூட்டு போட்டால் சசிகலாவால் செல்ல முடியாது என ஆளும் அதிமுக கருதியது. ஆனால், சசிகலா ஹெலிகாப்டர் மூலம் ஜெ'வின் சமாதி மீது மலர்தூவி தனது அஞ்சலியை செலுத்த உள்ளதாக நமக்குக் கிடைத்த சில தகவல்கள் கூறுகின்றன. சசிகலாவின் வருகையைத் தடுக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அது பலன் அளிக்காததால், எதிர்த் தரப்பினர் வருத்தத்தில் உள்ளனராம். சசிகலாவின் சின்னச் சின்ன அசைவுகளையும் கூர்ந்து கவனித்து வரும் உளவுத்துறை, 'இந்தத் திட்டத்தை எப்படித் தவறவிட்டோம்' எனக் கடும் அப்செட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது,