கரோனா பிடியில் இந்தியா அல்லோகல்லோகப்பட்டுள்ள சூழலில், மத்திய அரசின் மிக முக்கியத்துறையான உள்துறையின் அமைச்சர் அமித்ஷாவின் தலை வெளியே தெரியாமல் இருந்தது. அவர் எங்கே? என்கிற கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்த நிலையில், முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்திய கலந்துரையாடலில் காட்சித் தந்தார் அமித்ஷா.
அதை கண்டு பாஜக தலைவர்கள் மட்டுமல்ல; இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. இது குறித்து டெல்லியோடு தொடர்புடைய பாஜக மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, தேசிய குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தே மோடிக்கும் அமித்ஷாவுக்குமிடையே பல விஷயங்களில் கருத்து மோதல்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் அது அதிகரிக்கவும் செய்தது. இதனால்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு வந்தபோதுகூட அமித்ஷாவின் பங்களிப்பு அதில் பெரிதாக எதுவும் இல்லை. ஒதுங்கியே இருந்தார் அமித்ஷா.
இந்த நிலையில்தான், கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் பரவியது. இந்த விவகாரத்தில் அனைத்து துறைகளும் கடினமாக உழைத்தாலும், உள்துறை, சுகாதார துறை, நிதித்துறை ஆகிய அமைச்சகத்தின் பணிகள்தான் அதிகம். அதனாலேயே, இந்த மூன்று துறைகளுடன் தினமும் ஆலோசித்தபடி இருந்தார் மோடி. ஆனால், மூன்று துறைகளில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் ஆகியோரிடம் விவாதித்த அளவுக்கு அமித்ஷாவிடம் மோடி விவாதித்ததாக தெரியவில்லை. அது குறித்த பதிவுகளும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால், மோடியுடனான கலந்துரையாடல் மற்றும் விவாதங்களின்போது அமித்ஷா கலந்துகொண்டதும் இல்லை. தன்னை மேலிடம் புறக்கணிப்பதாக கருதினார் அமித்ஷா. அதனால், வீட்டிலேயே இருந்தார். அது குறித்து கேள்வி எழுந்தபோது, உடல் நலக்குறைவால் வீட்டிலிருந்தபடியே அலுவலக பணிகளையும் கரோனா தடுப்பு பணிகளில் உள்துறையின் நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறார் என பாஜக தரப்பிலிருந்தே தெரிவிக்கப்பட்டது.
இதனால் சில நாட்கள் அமித்ஷா பற்றிய பேச்சு இல்லாமலிருந்த நிலையில், திடீரென அவரது உடல்நலம் குறித்து தேவையற்ற முறையில் வதந்திப்பரவ, அது குறித்து விளக்கமளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் அமித்ஷா. அந்த வதந்திகளை பாஜகவிலுள்ள சிலர்தான் பரப்பியிருக்க கூடும் என்று அமித்ஷாவுக்கு சந்தேகம் உண்டு.
இந்த நிலையில்தான், ஆர்.எஸ்.எஸ்.ஸிலுள்ள அமித்ஷாவின் நண்பர்கள் கொடுத்த அட்வைஸ்படி, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தன்னை எந்த நோயும் தாக்கவில்லை என்றும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்ததுடன், மாநில முதல்வர்களுடன் மோடி நடத்திய ஆலோசனையிலும் கலந்துகொண்டார். இதுதான், வீட்டில் முடங்கியிருந்த அமித்ஷாவை வெளியே கொண்டு வந்ததன் பின்னணி! என விவரிக்கிறார்கள் பாஜகவினர்.