![virudhunagar constituency MNM announced for SMK](http://image.nakkheeran.in/cdn/farfuture/87Xco7uYVd-VutEEyy9NmHscTkyABdEgyy_L4CeTMH8/1615631152/sites/default/files/inline-images/th-1_800.jpg)
திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளில் மட்டும்தான் சீட்டுக்காக முட்டி மோதுவார்களா? இந்தத் தொகுதியை ஏன் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுத்தீர்கள் என்று போராடுவார்களா? மக்கள் நீதி மய்யமும் பெரிய கட்சிதான் என்பதை, விருதுநகர் தொகுதியை, கூட்டணிக் கட்சியான ச.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதன் மூலம் நிரூபித்துள்ளனர் அக்கட்சியின் விருதுநகர் மத்திய மாவட்ட நிர்வாகிகள்.
ம.நீ.ம. கட்சியினர் அப்படியென்ன செய்துவிட்டனர்?
மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அந்த நாற்பது தொகுதிகளின் பட்டியலை ச.ம.க. தலைவர் சரத்குமார் வெளியிட, அதில் விருதுநகர் தொகுதியும் அடக்கம்.
விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் ஒன்றுகூடி, தங்களின் எதிர்ப்பை தீர்மானமாக நிறைவேற்றிவிட்டு, “கட்சிக்காக ஓடி ஓடி உழைத்தோம். தேர்தல் பிரச்சாரத்தை எப்போதோ துவங்கிவிட்டோம். விருதுநகர் தொகுதியின் ம.நீ.ம. வேட்பாளர் யாரென்பதில் போட்டியோ பொறாமையோ இல்லாமல் ஒரே ஒருவரைத்தான் பரிந்துரைத்தோம். அதனால், ச.ம.க.வுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து, ம.நீ.ம.வுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையென்றால், விருதுநகர் மத்திய மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர, ஒன்றிய நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்வோம். அதேநேரத்தில், கமல் நற்பணி மன்றப் பணிகளைத் தொடர்வோம்” என்று குமுறலாகப் பேசினார்கள்.
ம.நீ.மய்யத்தினருக்கும், ச.ம.கட்சியினருக்கும், எம்.எல்.ஏ. ஆகி மக்களுக்குச் சேவை செய்வதில் இத்தனை போட்டியா?