மத்திய அரசு உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதனை பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்ற நிலையில் இதுதொடர்பாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. திமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. பல மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பளித்த அரசியல் சாதன அமர்வு மத்திய அரசு கொண்டு வந்த இந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். அவர் கூறியதாவது," இந்தத் தீர்ப்பு ஏற்புடையது அல்ல. இது இந்திய அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாகவே நான் பார்க்கிறேன். கல்வி ரீதியாக, சமூக ரீதியாக பின் தங்கியவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பிலேயே கூறப்பட்டுள்ளது. இதை அரசியல் அமைப்பு சட்டம் மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது. அப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கினார்கள் என்று தெரியவில்லை. பொருளாதார ரீதியாக வழங்கினார்கள் என்றால் வருடம் 8 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் பொருளாதாரத்தில் பின்தங்கியவரா? இந்தக் கேள்விக்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா?
முற்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக, இவர்கள் ஏதாவது ஒரு வகையில் இந்த மாதிரியான மக்கள் விரோத சட்டங்களைக் கொண்டு வந்து அவர்களுக்கு வேண்டிய மக்கள் முன் வைக்கிறார்கள். அதற்கு நீதிமன்றத்தின் மூலம் அனுமதியும் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் எந்த நோக்கத்திற்காக இந்தச் சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்; அதனால் யார் மட்டும் பலனடைவார்கள் என்பது எல்லாம் அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் இருக்கும் ஏழை மக்களை இவர்கள் ஒருபோதும் நினைப்பதில்லை.
இவர்களுக்கு வேண்டியவர்களுக்கு எப்படி சேவகம் செய்வது, அதன் மூலம் அரசியல் ஆதாயம் எப்படி அடையலாம் என்பதிலேயே இந்த மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தப் பொருளாதார இட ஒதுக்கீடு என்பது, மீண்டும் குலக்கல்வி திட்டத்தை எப்படித் துவங்கப் பார்க்கிறார்களோ அதைப்போல மீண்டும் நம்மைப் பழைய நிலைக்கே செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவர்கள் கூறுவதைப் போல் பார்த்தாலும் இந்தியாவில் 85 சதவீத மக்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்துதான் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் உண்டான இட ஒதுக்கீடு திட்டம் ஏதாவது அவர்களிடம் இருக்கிறதா?
அது மானியமாக இருக்கலாம், சுய தொழிலாக இருக்கலாம், எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி ஏதாவது மத்திய அரசிடம் திட்டம் இருக்கிறது என்றால் அவர்கள் கூறச் சொல்லுங்கள். இன்றைக்குக் காங்கிரஸ் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் அதனை ஏற்பதாகக் கூறுகிறீர்கள். இவர்கள் அதனை ஏற்றால் அனைவரும் ஏற்க வேண்டுமா? தவறு யார் செய்தாலும் அதனைத் தவறு என்று எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும், அது யாராக இருந்தால் என்ன, எந்தக் கட்சியாக இருந்தால் என்ன. வர்க்கப் பார்வையை ஒருபோதும் இந்த தேசத்தில் அனுமதிக்க முடியாது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் யாரையும் ஆண்டு கொண்டிருப்பவர்களுக்குத் தெரியவில்லையா? ஒரு பிரிவினரைக் காயப்படுத்திவிட்டு சிலரை சந்தோஷப்படுத்தும் வேலையை மத்திய அரசு செய்கிறது. இது அவர்களுக்கு எதிராகவே போய்விடும்" என்றார்.