வரும் மே19ம் தேதி, அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்சியும் அவரவர் பரப்புரையை திட்டமிட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
திமுக சார்பில் அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியும், ஒட்டப்பிடாரத்தில் சண்முகையாவும், திருப்பரங்குன்றத்தில் சரவணனும், சூலூரில் பொங்கலூர் பழனிசாமியும் நிற்கின்றனர்.
அதிமுக அறிவித்த பிறகுதான் அமமுக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமமுக அதிரடியாக நேற்று காலையே அறிவித்துவிட்டது. அமமுக சார்பில் அரவக்குறிச்சியில் சாகுல் ஹமீது, ஒட்டப்பிடாரத்தில் சுந்தர்ராஜ், திருப்பரங்குன்றத்தில் மகேந்திரன், சூலூரில் கே.சுகுமார் ஆகியோரும் நிற்கின்றனர்.
அதிமுக நேற்று (ஏப்ரல்22) தனது வேட்பாளர்களை அறிவிப்பதாக கூறியிருந்தது. நேற்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 4 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களையும் அறிவித்தது அதிமுக, ஆனால் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. நீண்டநேரம் ஆலோசனை நடைபெற்றும் மூத்த நிர்வாகிகளுக்குள் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கடைசிவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர், முன்னாள் அமைச்சர்களும் தங்களுக்கு சீட் வேண்டுமென கேட்பதால் இழுபறியிலேயே உள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது சுற்றுப்பயண விவரத்தை அண்மையில் அறிவித்தார். வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கிறார்.
நாம் தமிழர் கட்சியும் விரைவில் தனது வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறது.