Skip to main content

 எடப்பாடிக்கே சேலஞ்ச்  விட்ட அமைச்சர்!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த ரிப்போர்ட். அதனால் 19-ந்தேதி நடக்கும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இரண்டில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும், இல்லையென்றால் ஆட்சியைக் காப்பாற்ற முடியாது என எடப்பாடி அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார்.

 

eps



அதனால் சட்டமன்ற இடைத்தேர்தல் களத்தில் அ.தி.மு.க. வேகமாக களம் காண்கிறது. இந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி ஜெயித்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் எடுக்கச் சொல்லி உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி. "மத்தியில் பா.ஜ.க. கூட்டணியில் எனக்கு மந்திரி பதவி வேண்டும்' என கண்டிஷன் போட்டுக்கொண்டிருக்கும் தம்பிதுரையிடம், "நீங்கள் கரூர் பாராளுமன்றத் தொகுதியில் ஜெயித்தால் மட்டும் போதாது, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் நமது கட்சி வெற்றிபெற்றால்தான் மத்திய மந்திரி பதவி'' என எதிர் கண்டிஷன் போட்டிருக்கிறார் எடப்பாடி.

 

senthilbalaji



அவருடன் சீனியர் அமைச்சர்களான செங்கோட்டையன், தங்கமணி, சுகாதாரத்துறை விஜயபாஸ்கர், போக்குவரத்து விஜயபாஸ்கர் ஆகியோரையும் தேர்தல் பொறுப்பாளர்களாக்கியுள்ளார். இவர்களுடன் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கே.சி.கருப்பணன் ஆகிய அமைச்சர்கள் மற்றும் திருச்சி, கரூர், நாமக்கல் பகுதி மா.செ.க்கள், ஒன்றிய செயலாளர்கள் என பெரிய படையே களமிறங்கியுள்ளது. அவர்களிடம் தனிப்பட்ட முறையில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது எடப்பாடி பேசியிருக்கிறார். 

 

admk



"செந்தில் பாலாஜி கவுண்டர். அ.தி.மு.க. மேற்கு மாவட்டத்தில்  கவுண்டர்கள் மத்தியில் செல்வாக்கோடு இருப்பதற்கு ஒரே காரணம் தி.மு.க.வில் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த வலிமையான தலைவர்கள் இல்லை. அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி ஜெயித்துவிட்டால், மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வை வளர்த்துவிடுவார். எனவே அவரைத் தோற்கடிக்க வேண்டும்'' என உருக்கமாக அரவக்குறிச்சி தேர்தல் பணியில் உள்ள சாதாரண அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.
 

admk



"திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, துரைக்கண்ணு, ராஜலட்சுமி ஆகிய அமைச்சர்களோடு கட்சியின் மற்றொரு சீனியர் தலைவரான வைத்தியலிங்கத்தை, தம்பிதுரைக்கு அட்வைஸ் செய்து அனுப்பியது போல அனுப்பியிருக்கிறார் எடப்பாடி. அதேபோல் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு சீனியர் அமைச்சரான சி.வி.சண்முகம், காமராஜ் ஆகியோருடன் சேவூர் ராமச்சந்திரன், பெஞ்சமின் மற்றும் பக்கத்து மாவட்ட அமைச்சரான ராஜலட்சுமியைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். ஒட்டப்பிடாரத்திற்கு கட்சியின் சீனியர் தலைவரான ஓ.எஸ்.மணியனை மற்ற இரண்டு தொகுதிகளில் சீனியர்களை களமிறக்கியது போலவே களமிறக்கியிருக்கிறார். ஆனால் சூலூர் தொகுதியில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக திருப்பூர் மாவட்ட அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணன் கூட தொகுதிப் பக்கம் போகவில்லை. முழுக்க முழுக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பொறுப்பில்தான் தேர்தல் வேலைகளை எடப்பாடி ஒப்படைத்துள்ளார்.

 

eps



இந்த அமைச்சர் பட்டாளத்திற்கு என்ன வேலை என எடப்பாடி வேலை பிரிவினை ஒன்றையும் தந்துள்ளார். ஒவ்வொரு அமைச்சரும் 14,000 வாக்குகளுக்கு பொறுப்பாளர். அவர்கள் 14,000 வாக்குகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். நான்கு தொகுதிகளில் சூலூரில்தான் அதிகபட்ச தொகையாக ஓட்டுக்கு 4,000 ரூபாய் கொடுக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அரவக்குறிச்சியில் அது ஓட்டுக்கு 3,000 ஆக குறைந்துள்ளது. ஒட்டப்பிடாரத்தில் 2,000 என ஓட்டுக்கு தர முடிவு செய்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஓட்டுக்கு 2,000 இப்போதே முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளது'' என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். 

"இதில் அதிக வருமானம் இல்லாத அமைச்சர்களின் சுமையை வருமானம் அதிகம் பார்க்கும் துறையை வைத்துள்ள அமைச்சர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த விநியோகத்தை மாநில உளவுத்துறை போலீசாரும் சி.பி.சி.ஐ.டி. தலைவரான ஜாபர்சேட்டும் கண்காணிப்பார்கள் என எடப்பாடி ஒரு வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். 

இந்த வேலைத் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது... அதில் உள்ள சங்கடங்கள், இந்த பண விநியோகத்தை எதிர்க்கட்சியான தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் எப்படி எதிர்கொள்கின்றன என அ.தி.மு.க.வினரிடம் கேட்டோம். "அரவக்குறிச்சியில் அ.தி.மு.க., ஓட்டுக்கு 3,000 ரூபாய் பணம் கொடுத்தால் அதைவிட அதிகமாக 4,000 ரூபாய் பணம் கொடுக்க செந்தில்பாலாஜி ஏற்பாடு  செய்துவிட்டார். அதனால் அரவக்குறிச்சியில் பண விநியோகத்தில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஒட்டப்பிடாரத்தில் அமைச்சர் காமராஜ், "நான் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்தித்தவன். கலைஞரின் தொகுதியிலேயே 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஜெயிக்கும் அளவிற்கு பணத்தை அள்ளி வீசினேன். ஒட்டப்பிடாரத்தில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றிபெற வைப்பேன்' என எடப்பாடிக்கே சேலஞ்ச் விட்டிருக்கிறார். அவருக்குப் போட்டியாக சி.வி.சண்முகமும் பண விநியோகத்தில் வேகம் காட்டுகிறார். இவர்களோடு சீனியர் தலைவரான வைத்தியலிங்கமும் பண விநியோகத்தில் முனைப்பு காட்டுகிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அரவக்குறிச்சி தேர்தல் களத்தில் இருக்கும் சுகாதாரம் விஜயபாஸ்கர் மூலம் பணத்தை விநியோகிக்க உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி. சூலூர் தொகுதியில் ஒன்மேன் ஷோவாக ஒட்டுமொத்த பண விநியோகத்தையும் எஸ்.பி.வேலுமணி மேற்கொள்கிறார். இந்த பண விநியோகத்தைத்தான் அ.தி.மு.க. தனது பலமாகப் பார்க்கிறது. இதன்மூலம்தான் சூலூர், ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயிக்கும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் கடும் போட்டியை ஏற்படுத்துவோம் என்கிற அ.தி.மு.க.வினர், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜியை வீழ்த்த, அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க.வும் கைகோர்த்திருக்கிறது'' என்கிறார்கள்.