தினகரன் ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய மூவரையும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் ஏப்ரல் 30-ந்தேதி கடிதம் கொடுத்தார் அரசு கொறடா ராஜேந்திரன். இதனையேற்று, 7 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் சபாநாயகர். "இது ஜனநாயகப் படுகொலை' என விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மூவரின் பதவிப் பறிப்பை தடுக்கும் முகமாக, தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான கடிதத்தை பேரவை செயலாளர் சீனிவாசனிடம் தாக்கல் செய்தார். இந்த நிலையில் கலைச்செல்வனும் ரத்தினசபாபதி யும், தனபாலின் நோட்டீஸுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய் தலைமையிலான அமர்வு தனபாலின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்ததுடன் விளக்கமளிக்க வும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபாலிடமும் மூத்த அமைச்சர் ஜெயக்குமாரிடமும் நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார். அது குறித்து அ.தி.மு.க. சீனியர்களிடம் விசாரித்த போது, "எடப்பாடியிடம், "இடைக் காலத் தடைதானே தரப்பட்டிருக்கிறது. தீர்ப்பளிக்கவில்லையே. அதனால் பதட்டமடையத் தேவையில்லை' என சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார். சபாநாயகர் தனபாலோ, நீதி மன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என ஆராய்வோம். பதிலளிக்கலாமா? வேண்டாமா? என அதன் பிறகு முடிவு செய்யலாம். என்னுடைய செயல்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது. கோர்ட் நோட்டீசை வாங்காமல் திருப்பி அனுப்பவும் என்னால் முடியும் என தெரிவித்திருக்கிறார். அதனால் அதிகார மோதல் பூதாகரமாகலாம்'' என்கின்றனர். மேல்முறையீடு செய்யலாம் என்பதே அரசு வழக்கறிஞர்கள் தந்துள்ள ஆலோசனை. "சட்டமன்றமா நீதிமன்றமா என்ற நெடுங்கால சட்டப்போராட்டத்தின் அடிப்படையில் அதிகாரச் சண்டைக்கு சபாநாயகரைப் பயன்படுத்த ரெடியாகிறது அ.தி.மு.க. அரசு'' என்கிறார்கள் கோட்டையில் உள்ளவர்கள்.
அதேநேரத்தில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடமும் தி.மு.க. உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகளிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது, "சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அதன் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்கும் தந்திரத்தை கையாளத் துடித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு ஆதரவாக நின்றார் சபாநாயகர் தனபால். இடைக்கால தடையின் மூலம் இவர்களுக்கு கொட்டு வைத்துள்ளது உச்சநீதிமன்றம். சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்தில் தலையிட முடியும் என சொல்லாமல் சொல்லியுள்ளார் தலைமை நீதிபதி. சட்டத்திற்கும் மேலானவர்கள் யாரும் இருக்க முடியாது. அது சபாநாயகருக்கும் பொருந்தும். கடந்த 2017 ஆகஸ்டில் குட்கா ஊழல் விவகாரத்தை சட்டமன்றத்தில் அம்பலப்படுத்திய பிரச்சனையில் ஸ்டாலின் உட்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கும் நோக்கத்தில் அவர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமைக் குழுவுக்கு பரிந்துரைத்தார் சபாநாயகர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சபா நாயகரின் நடவடிக்கைக்கு ஸ்டே வாங்கியிருக்கிறோம். அதனால், சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் இருக்கிறது. ஜனநாயகத்துக்கு விரோதமான தனது ஆட்சியை பாதுகாக்க எடப்பாடி போடும் திட்டங்களை சட்டத்தின் உதவியுடன் உடைத்தெறிவோம்'' என்கிறார் அழுத்தமாக.
இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டு தனது ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டால், அதனை தடுத்து நிறுத்தி, சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிப்பதுடன், குட்கா ஊழல் பிரச்சனையில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் விவகாரத்தில் சபாநாயகரின் உத்தரவுக்கு கொடுத்துள்ள தடையை உடைத்து அவர்களை 100 நாள் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் திட்ட மிட்டிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்கான சட்ட ரீதியிலான முயற்சிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் ரகசியமாக எடுத்து வந்த நிலையில்தான், மூவரின் பதவிப் பறிப்புக்கு தடை கொடுத்து எடப்பாடி அண்ட் கோவிற்கு அதிர்ச்சியை தந்திருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
எடப்பாடியின் பிடியில் இருக்கும் அ.தி.மு.க.வை மீட்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் போராடி வரும் அ.தி.மு.க. வின் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியிடம் கேட்ட போது, "சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பது நூறு சதவீதம் உண்மை. அரசியல் சாசனத்தின்படி லோக்சபாவிலும் சட்டசபையிலும் இதற்கான விதிமுறைகள் தெளிவாக உள்ளன. நீதிமன்றத்தில் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ சபாநாயகர் பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒரு பிரச்சனையில் இப்படி தெரிவித்த சம்பவம் உண்டு. அதனால், நீதிமன்றத்தின் தற்போதைய நோட்டீஸை சபாநாயகர் நினைத்தால் புறக்கணிக்க முடியும். சபாநாயகரின் ஒவ்வொரு செயலிலும் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது. தற்போதைய பிரச்சனையில் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார் சபாநாயகர். அவ்வளவுதான். தீர்ப்பளித்து விடவில்லை. அதனால், தடை கொடுத்திருப்பது நீதிமன்றம் தனது வரம்பை மீறுவதாகும்''’என்கிறார்.