Skip to main content

திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண்; நடந்ததைக்கூறி காயப்படுத்திய மாப்பிள்ளை -  ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :62

Published on 21/10/2024 | Edited on 21/10/2024
parenting-counselor-asha-bhagyaraj-advice-62

முதல் திருமணத்தில் மகள் அனுபவித்த கொடுமையை பார்த்தும் இரண்டாவது திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய பெற்றோருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வரும் 37 வயதுடைய பெண் ஒருவர் நல்ல சம்பாத்தியத்துடன் கணவருடன் குடும்பம் நடந்தி வந்தார். மருத்துவத் துறையில் வேலை பார்க்கும் அவளது கணவர், சின்ன விஷயத்திற்குகூட கோபப்பட்டு மனைவியை அடிப்பது அசிங்கமாக பேசுவது என்று அவளை கொடுமைப்படுத்தியிருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பெண் தனது கணவரின் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் பெற்றோர்களிடம் கூறி விவாகரத்து வாங்கிக்கொண்டு வீட்டிலிருந்திருக்கிறார். நடந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருந்த அந்த பெண் மேற்படிப்புகளை படித்துவிட்டு தனியாக ஒரு கிளினிக் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பெற்றோர் வீட்டில் இருந்து வந்தாள். ஆனால் மகள் தனியாக வீட்டிலிருப்பது பெற்றோருக்கு மிகவும் கஷ்டமாக இருந்திருக்கிறது. 

எனவே அந்த பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் செய்ய அந்த பெற்றோர் முடிவெடுத்து மகளிடம் கூறியிருக்கின்றனர். முதல் திருமண வாழ்க்கையில் நடந்த சம்பவங்களிருந்து மீளமுடியாமல் இருந்த அந்த பெண் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து மாப்பிள்ளையிடம் பழகி அவரை புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறாள். இந்த கண்டிசனை ஏற்றுக்கொண்ட பெற்றோர், மாப்பிள்ளை தொடர்பான விவரங்களை கொடுத்து இருவரும் பழகும் வரை திருமணத்திற்காக காத்திருந்தனர். முதலில் அந்த பெண், தனது முதல் கணவரிடம் செய்த தவறை திருமணம் செய்ய விரும்புவரிடம் செய்யக்கூடாது என்று தெளிவாக அவரிடம் பழகி இருக்கிறாள். ஆனால் சில மாதங்கள் கழித்து அப்பெண்ணின் முதல் கணவருடனான வாழ்க்கையைப் பற்றி பேசி கோபமாக ஆபாச வார்த்தைகளைத் திட்டி அந்த நபர் பேசியிருக்கிறார். இதையடுத்து அந்த பெண், தான் பழகியதை கூறி தனது பெற்றோர்களிடம் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறாள். அதற்கு பெற்றோர், ஆண்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் சில நேரம் நல்ல விதமாக நடந்து கொள்வார்கள் என்று கூறி திருமணத்திற்கு சம்மதிக்க மகளை கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். 

இந்த சூழலில்தான் அந்த பெண்ணின் பெற்றோர் என்னிடம் வந்து, தங்களது மகளை திருமணத்திற்கு சம்மதிக்க வையுங்கள் என்றனர். அதன் பின்பு அந்த பெண்ணை அழைத்து பேசிய போது, முதல் திருமண வாழ்க்கையில் அவள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தாள். முதல் கணவர் அந்த பெண்ணை அடித்ததில் கருப்பையில் பாதிப்பு ஏற்படக்கூடிய அளவிற்கு மோசமான கொடூரத்தை அப்பெண் அனுபவித்திருக்கிறாள். இதையெல்லாம் வீட்டில் சொல்லாமல் மறைத்து அவளாகவே சிகிச்சை எடுத்திருக்கிறாள். ஒரு வேளை வீட்டில் நடந்ததை சொன்னால், முதலில் ஆண்கள் அடிப்பார்கள் பிறகு அணைத்துக்கொள்வார்கள் என்று பேசுவார்கள் என்ற காரணத்திற்காக தனக்கு நேர்ந்த வலியை பொறுத்துக்கொண்டு அந்த முதல் கணவரிடம் வாழ்ந்திருக்கிறாள். இதெல்லாம் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்ற பயம் அவள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது தெரியவந்துள்ளது. 

அதன் பிறகு அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து, உங்களின் மகள் மிகவும் தெளிவாக இருகிறாள். அவளின் முடிவை எடுக்க ஒரு வருடமாவது டைம் கொடுங்கள் இப்போதுதான் அந்த கொடுமையிலிருந்து வெளியே வந்திருக்கிறாள் அதற்குள் திருமணத்திற்கு அவசரபடாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசுங்கள் என்றேன். அதற்கு அந்த பெற்றோர் மகளுக்கு வயதை காரணம் காட்டி திருமணம் செய்ய வேண்டும் என்றனர். பின்பு நான் அவர்களிடம், எல்லா வயதிலும் இப்போது மாப்பிள்ளை கிடைப்பார்கள். மகள் வாழ்க்கைதான் முக்கியம். உங்களின் மனநிறைவுக்காக மகளின் முடிவை நீங்கள் எடுக்காதீர்கள் என்று அறிவுரை கூறினேன். பின்பு அந்த பெற்றோர் தங்களது மகள் சொல்லும்வரை திருமணம் பற்றி 6 மாதங்களுக்கு பேச மாட்டோம் என்றனர். இதையடுத்து அந்த பெண் என்னிடம் நன்றி தெரிவித்து பெற்றோர் கொடுத்த காலத்திற்குள் சொந்தமாக க்ளினிக் தொடங்கிவிடுவேன் என்று சந்தோஷமாக பேசிவிட்டு சென்றாள்.