Skip to main content

கியூபாவுக்கு மாடல் வடகொரியா என்றார் சே குவேரா! கொரியாவின் கதை #26

Published on 01/01/2019 | Edited on 01/01/2019
koreavin kathai

 

சோவியத் ரஷ்யாவையோ, சீனாவையோ சார்ந்த நாடு அல்ல. வடகொரியா என்பது கொரியர்களின் தனித்தன்மை கொண்ட நாடு. தனித்து தன்னை அடையாளப்படுத்தி வளர்ச்சி அடைந்தால்தான் தென் கொரியாவில் வாழும் சகோதரர்கள், அமெரிக்காவின் இருப்பை வெறுப்பார்கள் என்று கிம் இல்-சுங் நினைத்தார்.
 

ஸ்டாலினின் வழிமுறைகளை சோவியத் ரஷ்யாவின் ஜனாதிபதி குருசேவ் ஏற்க மறுத்ததை சீனா அங்கீகரிக்கவில்லை. சீனாவின் வழியிலேயே கிம் இல்-சுங்கும் ஆதரிக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் கலாச்சார புரட்சி என்று மாவோ மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கிம் இல்-சுங் ஆதரிக்கவில்லை. அவரிடமிருந்து கிம் விலகியிருந்தார். சோவியத், சீனா ஆகியவற்றிடம் இருந்து சற்று விலகியிருந்த அதேவேளையில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த கம்யூனிஸ்ட் நாடுகளுடன் கிம் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டார். அவை வடகொரியாவுக்கு பொருளாதார ரீதியில் நல்ல ஆதரவு அளித்தன.
 

கிழக்கு ஜெர்மனி, ரொமானியா, அல்பேனியா, யூகோஸ்லாவியா, ஜைரே ஆகிய நாடுகளின் அதிபர்கள் கிம் இல்-சுங்கின் ஆட்சியை விரும்பினார்கள். தலைமையைப் போற்றும் ஆட்சிமுறையை அவர் நடத்துவதைப் போலவே, தங்களுடைய நாடுகளிலும் அமல்படுத்த விரும்பினார்கள்.
 

1959ல் கியூபா புரட்சி வென்று அங்கு பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு அமைந்திருந்தது. அந்த அரசின் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த சே குவேரா வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் கிம் இல்-சுங்கின் நிர்வாகத்தை பார்த்தபிறகு, வடகொரியாவை கியூபா தனது மாடலாக பயன்படுத்தும் என்று கூறினார். அந்த அளவுக்கு கிம் வடகொரியா மக்களுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்திருந்தார். எல்லா பிரச்சனைகளையும் மக்களோடு இருந்து எதிர்கொண்டார்.


 

koreavin kathai


 

1960களில் வியட்னாம் போர் உச்சத்தில் இருந்தது. வியட்னாமும் இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. வட வியட்னாம் ஹோ சி மின் தலைமையில் கம்யூனிஸ்ட் நாடாகவும், தென் வியட்னாம் அமெரிக்காவின் பிடியிலும் இருந்தது. ஆனால், அங்கு இரண்டு வியட்னாம்களையும் இணைப்பதில் ஹோ சி மின் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரண்டு வியட்னாம்களின் மக்களும் இணைய விரும்பினர். எனவே, அமெரிக்காவால் வட வியட்னாமின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. முடிவில் தென் வியட்னாமிலிருந்து அமெரிக்க ராணுவம் தோற்றோடியது. அந்தப் போராட்டத்தை கவனித்துவந்த கிம் இல்-சுங், அதுபோன்றதொரு போராட்டத்தை தென் கொரியாவுக்கு எதிராக நடத்த வேண்டும் என்று விரும்பினார். இதற்காக கொரில்லா தாக்குதல் தந்திரத்தை அவர் பலமுறை கையாண்டார். தென்கொரியாவுக்குள் அதிரடிப்படை ஊடுருவல், எல்லையோரத்தில் அமெரிக்க ராணுவத்தினருடன் அடிக்கடி துப்பாக்கி தாக்குதல் என வடகொரியா அடிக்கடி சண்டையில் ஈடுபட்டது. தென்கொரியாவின் ஜனாதிபதியாக இருந்த பார்க் சுங்-ஹீயை கொலை செய்ய குடியரசுத்தலைவர் மாளிகைக்குள்ளேயே வடகொரியா அதிரடிப்படை புகுந்த சம்பவமும் நடந்தது.
 

1968 ஆம் ஆண்டு வட வியட்னாம் மக்கள் ராணுவமும், வியட்காங் கொரில்லா குழுவும் தென் வியட்னாம் ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது. தென்வியட்னாமில் உள்ள 800 நகரங்களில் முக்கிய ராணுவ தளங்கள் அனைத்தின் மீதும் வடவியட்னாம் கொரில்லாக் குழுக்கள் தாக்குதல் நடத்தினால், மக்கள் புரட்சி வெடிக்கும் என்றும், வியட்னாம் இணைப்பு எளிதில் சாத்தியம் என்றும் திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதல் வியட்னாம் புத்தாண்டு அன்று தொடங்கியது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி ஜான்ஸன் வடவியட்னாமுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதலை நடத்தப்போவதாக அறிவித்தார். அவர் பேசிய மூன்றாவது நாள் வடகொரியா அதிரடிப்படை குழுவினர் 31 பேர் தென்கொரியாவுக்குள் நுழைந்தனர். ஜனாதிபதி பார்க்கை கொல்ல நடந்த முயற்சியில் தென்கொரியர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். தென்கொரியா ஜனாதிபதி பார்க்கை கொலை செய்யும் முயற்சி 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி நடந்தது. அந்த முயற்சி தோல்வி அடைந்தவுடன், அடுத்த இரண்டாம் நாள், தனது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பியூப்லோ என்ற கப்பலை 83 அமெரிக்க கடற்படை வீரர்களுடன் வடகொரியா கைப்பற்றியது. அப்போது நடந்த சண்டையில் அமெரிக்க வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
 

அந்தக் கப்பல் தனது கடல் எல்லைக்குள் பலமுறை ஊடுருவியிருப்பதற்கு வடகொரியா ஆதாரங்களைக் கொடுத்தது. ஆனால், அமெரிக்காவோ தனது கப்பல் சர்வதேச எல்லையில்தான் இருந்தது என்று பிடிவாதம் பிடித்தது. சுமார் 11 மாதங்கள் அமெரிக்க வீரர்களை வடகொரியா சிறை வைத்திருந்தது. பின்னர் அமெரிக்கா முறைப்படி மன்னிப்புக் கேட்டதால் வீரர்களை மட்டும் விடுவித்தது. இப்போதும் அந்தக் கப்பல் தலைநகர் பியாங்யாங்கில் போடாங் நதியில் போர் அருங்காட்சியகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
 

வியட்னாமில் யுத்தம் தீவிரமடைந்த நிலையில், கப்பலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இசி-121 ரக போர் விமானத்தை வடகொரியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாத நிலையில் அமெரிக்கா இருந்தது. அப்போது நிக்ஸன் தலைமையில் அரசு இருந்தது. வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்தால், கொரியாவில் ஏற்படும் போரை சமாளிக்க தன்னிடம் போதுமான பலம் இல்லை என்று நிக்ஸன் கருதினார்.
 

இந்நிலையில்தான், 1972 ஆம் ஆண்டு வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே இணைப்பு முயற்சிகள் குறித்து முதல் கூட்டம் பியாங்யாங்கில் நடைபெற்றது. இதற்கு காரணம் வடகொரியாவின் பொருளாதார வளர்ச்சிதான் என்று கூறப்பட்டது. 1965 ஆம் ஆண்டிலேயே வடகொரியா பொருளாதார தன்னிறைவு அடைந்துவிட்டது. இந்த வளர்ச்சியை மிகப்பெரிய மாயாஜாலம் என்று பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜோன் ராபின்ஸன் வியந்து எழுதியிருக்கிறார்.


 

koreavin kathai

 

அதாவது, தென்கொரியாவில் ஏழைகளையும், சாலையோர குடியிருப்புவாசிகளையும் கொன்று குவித்து தலைநகர் சியோலை சுத்தமான நகரம் என்று அடையாளப்படுத்தும் முயற்சி நடந்துகொண்டிருந்த சமயத்தில் வடகொரியா தனது மக்களுக்கு எல்லாவற்றையும் பிரித்துக் கொடுத்து, எல்லோரும் சமம் என்பதை நிலைநாட்டியிருந்தது.
 

பொருளாதாரத்திற்காக அமெரிக்காவிடம் தனது படைவீரர்களை விலைக்கு விற்று பலிகொடுத்துக் கொண்டிருந்த தென்கொரியா வடகொரியாவின் முன்னேற்றத்தைப் பார்த்து வியந்துகொண்டிருந்தது.
 

வடகொரியா தனது சுதந்திரத் தன்மையை வெளிப்படுத்துவதற்காக 1975 ஆம் ஆண்டிலேயே அணிசேரா நாடுகள் அமைப்பில் இடம்பெற்றது. அதற்கு முன்னதாக, 1968 ஆம் ஆண்டிலேயே வடகொரியாவில் எல்லா வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. 1972 ஆம் ஆண்டிலேயே 5 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. 200க்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், சிறப்பு கல்லூரிகளும் நிறுவப்பட்டன. 1980களின் தொடக்கத்திலேயே மொத்த ஜனத்தொகையில் 60 முதல் 70 சதவீதம் பேர் நகர்மயப்படுத்தப்பட்டார்கள். அது இப்போது முழுக்கமுழுக்கவே நகர்மயப்படுத்தப்பட்டுவிட்டது.
 

வடகொரியாவின் இந்தச் சாதனைக்கு கிம் இல்-சுங் அறிமுகப்படுத்திய ஜுச்சே என்ற கோட்பாடுதான் முக்கிய காரணம். ஜுச்சே என்பது கொரிய மக்களுக்கான புரட்சிகர கோட்பாடு. அதாவது, கொரியாவில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றால், கொரியாவின் வரலாறையும், புவியியல் தன்மைகளையும், கொரியா மக்களின் பழக்கவழக்கங்களையும் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் தங்களுடைய மண்ணை நேசிக்கும் வகையில் கற்பிக்க முடியும் என்று 1955 ஆம் ஆண்டிலேயே கிம் இல்-சுங் பேசியிருந்தார். அந்த அடிப்படையில்தான், 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ஜுச்சே கோட்பாடின் மூன்று அடிப்படை விஷயங்களை மக்களுக்கு அறிவித்தார் கிம். அதாவது, அரசியல் சுதந்திரம், பொருளாதார தன்னிறைவு, பாதுகாப்பில் தன்னிறைவு ஆகியவைதான் வடகொரியாவின் இலக்கு என்றார்.
 

அந்த மூன்று விஷயங்களிலும் வடகொரியா தன்னிறைவு அடைந்துவிட்டது. ஆனால், இந்த தன்னிறைவு அடைவதற்குள் அது சந்தித்த தடைகள் ஏராளம். வடகொரியா தனது மின் தேவைகளுக்காக அணு உலைகளை உருவாக்க தொடங்கியதும் அதையே காரணமாக காட்டி வடகொரியாவை ரவுடி நாடு என்றும், அது அணு ஆயுதங்களைத் தயாரிப்பது உலகின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் அமெரிக்கா கூப்பாடு போட்டது. சோவியத் யூனியன், சீனா, கிழக்கு ஐரோப்பாவில் இருந்த கம்யூனிஸ்ட் நாடுகள், உலகம் முழுவதும் இருந்த சோசலிஸ்ட் நாடுகள் வடகொரியாவுக்கு உதவிகளை அளித்தன. வடகொரியா தனது கனிம வளங்களை ஏற்றுமதி செய்து தனது சொந்த தேவைகளுக்கான தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்துகொண்டது.
 

வெளிநாடுகளில் கடன்களை வாங்கி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை வடகொரியா கட்டியது. இதையடுத்து, சீனா மற்றும் சோவியத் ரஷ்யாவிடமிருந்து பெறும் பாதுகாப்பு உதவிகளைக் குறைத்துக் கொண்டது. பெட்ரோகெமிகல், ஜவுளி, கான்கிரீட், உருக்கு, காகிதம் என்று பல்வேறு தொழிற்சாலைகளுக்கான பாகங்களை முன்னேறிய நாடுகளிடமிருந்து வடகொரியா பெற்றுக்கொண்டது. ஜப்பான் உதவியோடு, உலகின் மிகப்பெரிய சிமெண்ட் தொழிற்சாலையையும் வடகொரியா கட்டியது.
 

1973ல் உருவான பெட்ரோல் விலை சரிவு வடகொரியாவை வெகுவாகப் பாதித்தது. இதன்விளைவாக வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருந்தது. இதுவும் வடகொரியாவுக்கு நல்லதே செய்தது. வடகொரியர்கள் தங்களுடைய தொழில்நுட்பத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளத் தயார் ஆனார்கள். தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்த வகையில் வடகொரியாவுக்கு உதவியாக இருந்தன.

 

koreavin kathai


 

இவ்வளவு சிக்கல்களுக்கும் இடையில் வடகொரியா தனது கனவுத் திட்டங்களாக கையிலெடுத்த ஜுச்சே கோட்பாடுக்கான நினைவுக் கோபுரம் கட்டுவதையும், நாம்போ அணையைக் கட்டுவதிலும், ரியுக்யாங் ஹோட்டலைக் கட்டுவதிலும் உறுதியாக இருந்தது. அத்துடன், 1988ல் தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு போட்டியாக உலக இளைஞர் மற்றும் மாணவர்களுக்கான 13 ஆவது உலகத் திருவிழாவை வடகொரியா தனது தலைநகர் பியாங்யாங்கில் நடத்தியது. இந்தப் போட்டிகளை சோசலிஸ மற்றும் கம்யூனிஸ நாடுகள் மட்டுமே ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் உலக அமைதிக்கான அடையாளமாக நடத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 

1980களில் கிம் இல்-சுங் சோவியத் ரஷ்யா, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியா, போலந்து, ஹங்கேரி, ரொமேனியா, பல்கேரியா, யூகோஸ்லாவியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அதிக அளவிலான முதலீடுகளை பெற்றுவந்தார். ஆனால், சோவியத் ரஷ்யாவில் மிகைல் கோர்பசேவ் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் அங்கு சீர்குலைவு ஏற்பட்டது. கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத் ரஷ்யாவிலும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. இது வடகொரியாவுக்கு பலத்த பின்னடைவாக அமைந்தது. ஆனால், அதையும் வடகொரியா தனக்கான பாடமாக எடுத்துக்கொண்டு, ஜுச்சே கோட்பாடுகளில் இருந்த குறைகளை சரிசெய்துகொண்டது.
 

இந்தக் காலகட்டத்தில் கிம் இல்-சுங்கின் மகன் கிம் ஜோங்-இல் ஆட்சி நிர்வாகப் பணிகளைக் கவனிக்கும் பொறுப்புக்கு வந்துவிட்டார். சோவியத் ரஷ்யாவும், உலகின் முக்கியமான கம்யூனிஸ, சோசலிஸ நாடுகளும் வீழ்ச்சி அடைந்த நிலையில், வடகொரியாவையும் சீர்குலைக்க அமெரிக்கா பல திட்டங்களைத் தீட்டியது. வடகொரியாவின் அணுஆயுத முயற்சிகளைக் காரணமாக காட்டி அந்த நாட்டின் மீது ஐ.நா.உதவியோடு பொருளாதாரத் தடைகளை விதித்தது.
 

ஆனால், அந்தத் தடைகளைத் தாண்டி வடகொரியா தனித்து நின்று சமாளித்து, தனது ஆயுதத் தேவைகளில் தன்னிறைவு அடைந்தது. அமெரிக்காவையே மிரட்டும் அளவுக்கான கண்டம்விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதங்களையும், அணு ஏவுகணைகளை எதிர்த்து தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணைகளையும் வடகொரியா தயாரித்தது.
 

வடகொரியாவுக்கு உதவும் நாடுகள் நெருக்கடியில் சிக்கிய நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்தும் வடகொரியா சுயமாக மீண்டது. சீனா மட்டுமே வெளிப்படையாக உதவும் நாடாக இருந்தது.
 

1994 ஆம் ஆண்டு கிம் ஜோங்-இல் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய மரணம் உலக வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. பதப்படுத்தப்பட்ட அவருடைய உடல் இன்றும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தங்களுடைய தந்தையை இழந்ததைப் போல கதறித் துடித்தார்கள். அவருடைய இறுதி ஊர்வலம் இன்றைக்கும் உலக சாதனையாக கருதப்படுகிறது. காணொளிக் காட்சியாக இன்றைக்கும் இணையத்தில் கிடக்கிறது.
 

அவருடைய மரணம் வடகொரியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினாலும், நிர்வாகத்தில் எந்த தொய்வையும் ஏற்படுத்திவிடவில்லை.



முந்தைய பகுதி:

சோவியத், சீன சதியை முறியடித்த கிம் இல்-சுங்! கொரியாவின் கதை #25