தமிழ் சினிமாவுலகில் மிக ஆழமாக வேரூன்றியிருப்பவை சென்டிமென்டுகள். படத்தில் சில சென்டிமென்டுகளுக்கு இடமிருக்கும், படத்திற்கு வெளியில் பல சென்டிமென்டுகளுக்கு பின்பற்றப்படும். இந்த சென்டிமென்டுகளை போல தீவிரமாக நம்பப்படும் இன்னொரு விஷயம் 'லக்'. இன்று வரை பல படங்களின் வெற்றிக்கும் தோல்விக்கும் மட்டுமல்லாமல் பல மனிதர்களின் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாக சொல்லப்படுவது 'லக்'. இந்த லக்கை சார்ந்தே 'நேரம்' என்பதும் தமிழ்த்திரையுலகில் குறிப்பிடப்படும். பல பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தங்களின் பேட்டிகளில் வெற்றி - தோல்வி குறித்த பதில்களில் 'எல்லாம் டைம் சார்' என்று குறிப்பிடுவதை கவனிக்கலாம்.
சில நிகழ்வுகளை, பலரின் வாழ்க்கையை கவனிக்கும்போது நமக்கும் 'அது உண்மைதானோ, எல்லாம் டைம்தானோ' என்ற கேள்வி எழுகிறது. நடிகர் சாந்தனு, புகழ்பெற்ற இயக்குனர், நடிகர் பாக்யராஜின் மகன். பாக்யராஜ், இயக்குனர் பாரதிராஜாவின் தலைசிறந்த சிஷ்யர் என்று சொல்லத்தக்கவர். இயக்கத்திலும் நடிப்பிலும் பல வெற்றிகளைக் கண்டு உச்சம் தொட்டவர். எம்.ஜி.ஆர், இவரை தனது கலை வாரிசு என்று அறிவிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரின் பாசத்தை பெற்றவர். எம்.ஜி.ஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபொழுது, அவரை சந்திக்கும் வாய்ப்பு பெற்ற ஒரு சிலரில் பாக்யராஜ் ஒருவர். திரையுலகில் இவ்வளவு வெற்றிகரமாக இருந்த பாக்யராஜ், தனது மகன் சாந்தனுவை அவரது பள்ளிப்பருவத்திலேயே நடிக்கவைத்தார். 'வேட்டிய மடிச்சுக் கட்டு' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சாந்தனு. அந்தப் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. பின்னர் பல வருடங்கள் எந்தத் திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார். பல வருடங்கள் கழித்து, தன் மகனை நாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்ய நினைத்த பாக்யராஜ், பலரிடம் கதை கேட்டார்.
இங்குதான் 'டைம்' என்ற விஷயம் வருகிறது. ஒவ்வொரு திரைப்படத்தின் உருவாக்கத்துக்குப் பின்னும் ஒரு கதை இருக்கும். முதலில் கதாசிரியர் உருவாக்கிய கதை வேறாக இருந்திருக்கும், பின்னர் பல மாற்றங்களை கண்டிருக்கும். முதலில் நடிக்கவிருந்தவர் வேறொருவராக இருந்திருப்பார், பின்னர் வேறொரு ஹீரோ நடித்திருப்பார். இப்படி, பல கதைகள் இருக்கும். சாந்தனு, ஒரு நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானது 'சக்கர கட்டி' படத்தில். கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு இயக்குனராக அறிமுகமான அந்தப் படத்தில்தான் சாந்தனு நாயகனாக அறிமுகமானார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த அந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை. பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. ஆனால், படம் பெரிய வெற்றி பெறவில்லை. டான்ஸ், நடிப்பு என்று திறமையான இளைஞனான சாந்தனுவுக்கு இன்று வரை ஒரு பெரிய பிரேக் கிடைக்கவில்லை. ஆனால், இவருக்கு ஆரம்பத்தில் வந்த படங்கள் குறித்து அறிந்தால் நமக்கு ஆச்சரியம் ஏற்படும்.
'சக்கர கட்டி' படத்துக்கு முன்பே சாந்தனுவுக்கு நாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அது 'காதல்' படத்தில்... ஷங்கர் தயாரிப்பில் பரத் - சந்தியா நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற 'காதல்' படத்தில் நடிக்க சாந்தனுவை அணுகினார்கள். ஆனால், அப்போது சாந்தனு மிகவும் சின்னப்பையனாக இருக்கிறார் என்று கூறி அந்த வாய்ப்பை தவிர்த்தார் பாக்யராஜ். அடுத்ததாக 'சக்கர கட்டி' காலகட்டத்திலேயே 'சுப்ரமணியபுரம்' படத்தில் ஜெய் நடித்த பாத்திரத்தில் நடிக்க சாந்தனுவுக்கு வாய்ப்பு வந்தது. மிகப்பெரிய தயாரிப்பில் 'சக்கர கட்டி' படத்தில் அறிமுகமாக கமிட்டாகியிருந்ததால் சாந்தனுவால் 'சுப்ரமணியபுரம்' வாய்ப்பை ஏற்க முடியவில்லை. 'சுப்ரமணியபுரம்' பெற்ற வெற்றி உலகறிந்தது. பின்னர் 'களவாணி' திரைப்படத்திலும் முதலில் சாந்தனு நடிப்பதாக இருந்து, அந்தப் படத்தின் கதை விவாதத்தில் பாக்யராஜ் கலந்துகொண்டார். பின்னர் சில காரணங்களால் அந்தப் படத்தில் சாந்தனு நடிக்கவில்லை. விமல் நடித்த அந்தப் படமும் பெரிய வெற்றிப்படம்.
இப்படி பல வெற்றிப் படங்கள் சாந்தனுவிடமிருந்து கைநழுவின. சாந்தனு நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆண்டுகள் கடந்த நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் பாக்யராஜ் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் படத்தில் சாந்தனு நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன. தயாரிப்பாளருடன் மிஷ்கின், சாந்தனு இணைந்திருந்த புகைப்படங்கள் வெளிவந்தன. இந்த முறை சாந்தனுவுக்கு நல்ல பிரேக் கிடைக்குமென்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், திடீரென உதயநிதி நடித்து வெளிவந்தது மிஷ்கின் படம். இதற்கெல்லாம் காரணம் 'டைம்' என்றே சாந்தனுவும் கூறியுள்ளார்.
இன்று தமிழ் சினிமாவின் முதன்மை நாயகர்களில் ஒருவராக இருக்கும் அஜித், பல வெற்றிப் படங்களை தவறவிட்டுள்ளார். விஜய் - சூர்யா நடித்த 'நேருக்கு நேர்' திரைப்படம் அஜித் நடிக்கவேண்டியதே. ஆனால், சில பிரச்னைகளால் அஜித் விலகிவிட்டார். அதற்கு முன்பு வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆசை' பெரிய வெற்றிப் படம். அஜித்திற்கு முதல் வெற்றிப்படம் அதுவே. ஆனால் 'நேருக்கு நேர்' நழுவிப்போனது. விக்ரமுக்கு மாஸ் ஹிட் படமாக அமைந்த 'ஜெமினி' அஜித்திற்கென உருவாக்கப்பட்ட கதை. ஆனால், அதை தவிர்த்து 'ரெட்' படத்தில் நடித்தார் அஜித். 'ஜெமினி' பிளாக்பஸ்டர், 'ரெட்' பெரிய ஏமாற்றம். சூர்யா நடித்த 'கஜினி', 'மிரட்டல்' என்ற பெயரில் அஜித் நடிக்க வேண்டிய படம். 'நியூ' படத்தில் அஜித் - ஜோதிகா நடிப்பதாக இருந்து போஸ்டர்களெல்லாம் வந்தன. பின்னர் எஸ்.ஜே.சூர்யா - சிம்ரன் நடித்தனர். இப்படி பல வெற்றிப்படங்கள் அஜித் நடிப்பதாக இருந்து நழுவிப்போயிருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம். ஆனால், அத்தனைக்குப் பிறகும் அஜித் இன்று மிக வெற்றிகரமான மாஸ் ஹீரோ. "எனக்கான அரிசியில் என் பெயர் எழுதியிருக்கும் என்பதை நான் ரொம்ப நம்புறேன் சார்" என்பதே 'ஏன் இந்தப் படங்களை தவறவிட்டீர்கள்?' என்ற கேள்விக்கு அஜித்தின் பதில்.
அஜித்தைப் போலவே பல வெற்றிப் படங்களை தவற விட்டிருக்கிறார் சாந்தனு. ஒரு வெற்றிக்காகக் காத்திருக்கிறார். விஜய்யின் தீவிர ரசிகரான அவர், இந்த விஷயத்தில் அஜித்தை நினைவுபடுத்துகிறார். இப்போது விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் நடிக்கிறார். அஜித் சொன்ன பதில்தான்... சாந்தனுவுக்கான வாய்ப்பு கண்டிப்பாக அவருக்குக் கிடைக்கும். அவர் வெற்றி பெறும் 'டைம்' ஒரு நாள் வரும்.
இன்னும் பல கதைகள் பேசுவோம்...
போன கதை...
விஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது! - பழைய கதை பேசலாம் #1