Skip to main content

பாஜகவின் தேர்தல் யுத்திகள் - 1 பொக்ரான் அணுகுண்டு சோதனை!

Published on 02/03/2019 | Edited on 02/03/2019


 

pokhran



பாஜக ஆட்சிக் காலத்தில் எத்தனையோ பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மட்டுமே பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றதைப் போல ஒரு தோற்றத்தை பிரதமர் மோடி தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.

 
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்குள் நடைபெற்ற பல பயங்கரவாத தாக்குல்கல்களுக்கு இந்துப் பயங்கரவாதமே பின்னணியில் இருந்திருப்பதை தேசிய புலனாய்வு நிறுவனம் ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறது. இந்தத் தாக்குதல்களுக்கு பாஜகவைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா உள்ளிட்ட பல முக்கிய சாமியார்களுக்கு தொடர்பு இருப்பதும் அம்பலமாகி இருக்கிறது.
 

அதுபோல, பாகிஸ்தானுடனான பதற்றத்தை அதிகரித்து அதை அப்படியே தேர்தலுக்கு பயன்படுத்தியதும், இந்திய வீரர்களின் உயிர்த் தியாகத்தை தனது அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தியதும் பாஜகதான் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
 

இந்திய ராணுவத்தை தனது நலனுக்காக பாஜக அரசு எப்போது பயன்படுத்து தொடங்கியது என்றால், 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் முதன்முறையாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவுடனேயே தொடங்கிவிட்டது.
 

பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு!

 
1974 ஆம் ஆண்டு மே மாதத்திலேயே இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் இந்தியா பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது. அன்றே இந்தியா அணு ஆயுத நாடு என்ற பெருமையை பெற்றுவிட்டது. அதன்பிறகு, அணு ஆயுதங்கள் தயாரிப்புக்கு இந்தியா தகுதிபெற்றுவிட்டது.


 

pokhran


 

இரண்டாம் உலகப்போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்ட சமயத்திலேயே இந்தியாவில் அணு ஆயுத திட்டம் குறித்து 1944 ஆம் ஆண்டு அணு இயற்பியலாளர் ஹோமி பாபா முயற்சியை தொடங்கிவிட்டார். அதற்காக டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார்.

 
1950களில் தொடக்கநிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. புளூடோனியம் தயாரிப்பு அணுகுண்டுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாக திட்டமிடப்பட்டன. 1962 ஆம் ஆண்டு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் போர் நடந்தது. அதைத் தொடர்ந்து 1964 ஆம் ஆண்டு சீனா அணுகுண்டு வெடித்து இந்தியாவை அச்சுறுத்தியது. லால்பகதூர் சாஸ்திரி பிரதமரான பிறகு விக்ரம் சாராபாய் இந்தத் திட்டத்துக்கு தலைமை ஏற்றார். சாஸ்திரி அணு ஆயுத தயாரிப்பை ஊக்குவிக்கவில்லை.
 

இந்நிலையில்தான் 1966ல் இந்திய பிரதமராக பொறுப்பேற்ற இந்திரா இந்தியாவின் அணு ஆயுதத் திட்டத்தை தீவிரப்படுத்தினார். இந்தத் திட்டத்துக்கு ராஜா ராமண்ணாவை தலைவராக்கினார். அணு ஆயுதங்களைத் தயாரிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். இதன் விளைவாகவே, 1974 ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியாவின் முதல் அணுகுண்டை வெடித்தது இந்தியா.
 

இதையடுத்து உலகின் வல்லரசுகள் பதற்றம் அடைந்தன. இந்தியா அணு ஆயுத நாடாக மாறுவதை அவை ஏற்கவில்லை. இந்தியா மீது அணு தொழில்நுட்பத் தடைகளை உலகின் பல நாடுகள் விதித்தன.
 

தொடர்ந்து இந்தியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததால் இந்திரா ஆட்சியை இழக்க நேரிட்டது. அதன்பிறகு வந்த ஜனதா ஆட்சியில் அணு ஆயுதத்திட்டம் பின்னுக்கு தள்ளப்பட்டது. 1980ல் மீண்டும் இந்திரா பிரதமரானதும் அணு ஆயுதத் திட்டத்துக்கு ராஜா ராமன்னாவை தலைவராக்கி வேகம் கொடுத்தார். பாகிஸ்தான் அந்த நேரத்திலேயே ஏராளமான நிதியை ஒதுக்கி அணு ஆயுதத் திட்டத்தை விரைவுபடுத்தியதை அறிந்ததால் இந்திராவும் விரைவுபடுத்தினார். 1984ல் இந்திரா கொல்லப்பட்டதும் பிரதமரான ராஜிவ் காந்தியும் இந்தத் திட்டத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கினார்.


 

pokhran


 

அணுகுண்டு, ஏவுகணைகள் தயாரிப்பிலும் சோதனையிலும் இந்தியா முன்னேற்றம் கண்டது. ஆனால், 1989ல் தேசியமுன்னணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் சற்று சுணக்கம் ஏற்பட்டது. ஆனால், 1991ல் ஆட்சிப் பொறுப்பேற்ற நரசிம்மராவ் காலத்தில் அணுகுண்டு தயாரித்து முடிக்கப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த அப்துல்கலாம் உள்ளிட்டோர் அந்த அணுகுண்டை சோதனை செய்ய விரும்பியும் நரசிம்மராவ் அனுமதிக்கவில்லை. பாகிஸ்தானும் அணுகுண்டு தயாரித்து வைத்திருப்பதை அறிந்ததால், இந்தியா வெடித்தால் அதுவும் வெடித்து அணு ஆயுத நாடு என்ற தகுதியைப் பெற்றுவிடும் என்பதால் அவர் மறுத்தார்.
 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், 1998 ஆம் ஆண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமரான வாஜ்பாய், அணுகுண்டை வெடிக்கு அனுமதி கொடுத்தார். இந்தியா வெடித்தவுடன், அதுவரை பொறுமையாக இருந்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு நிகராக அடுத்தடுத்து அணுகுண்டுகளை வெடித்தது. இதன்மூலம் பாகிஸ்தானையும் இந்தியாவுக்கு நிகரான நாடாக வெளிப்படுத்தியதே வாஜ்பாய் அரசின் சாதனையாகிவிட்டது.

 

கூட்டணிக் குழப்பத்தால் 13 மாதங்களில் ஆட்சியை இழந்த வாஜ்பாய் தனது அரசுதான் இந்தியாவை அணு ஆயுத நாடாக்கியது போன்ற பிரச்சாரத்தை மேற்கொண்டது. இந்தியாவை ஆண்ட முந்தைய அரசுகளின் சாதனையை தனது சாதனையாக கூச்சமில்லாமல் பிரச்சாரம் செய்தது பாஜக.

 

அடுத்து கார்கில் சண்டையை குறித்து பார்க்கலாம்…