இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்து முதல்வர்கள் பதவியேற்றிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் பெரும் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இது முன்னோட்டம் என்று கூறப்படுகிறது. அந்தந்த மாநிலங்களின் அரசியல் சூழ்நிலை மட்டுமே என்றும் சிலர் கூறுகின்றனர். மோடியின் போட்டியாளர் தான் தான் என்று நிறுவியிருக்கிறார் ராகுல். இப்படி அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வென்று முதல்வராகியிருப்பவர்களை தெரியுமா? தெரிந்துகொள்ள வேண்டாமா? கடந்த பகுதியில் நாம் அப்போதைய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் கதையைப் படித்தோம். அப்பொழுதே அடுத்த தேர்தலில் பாஜகவின் வாய்ப்புகள் குறைவு என்பதை பேசியிருந்தோம். அது நிகழ்ந்திருக்கிறது. ஆனால், மக்களைப் போலவே நாமும் சச்சின் பைலட் முதல்வராவார் என்று எதிர்பார்த்தோம். இங்கோ அசோக் கெலாட் முதல்வராகியிருக்கிறார். இதுதான் காங்கிரஸ், இதுதான் அரசியல்.
இந்திய வரைப்படத்தில் உச்சத்தில் இருக்கும் மாநிலம் ராஜஸ்தான். ராஜஸ்தானிகள் மற்ற மாநில மக்களை விட தனித்தே தெரியும் வகையில் அவர்களது ஆடைகள் இருக்கும். அதேபோல் வீரத்திலும் அவர்கள் தனித்துவமானவர்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அங்கு தனித்துவம் நிறைந்து இருந்தாலும், அரசியல் என்பது மற்ற மாநிலங்களைப்போல்தான். தமிழகத்தில் திமுக அதிமுக போல், ராஜஸ்தானில் காங்கிரஸ் – பாஜக. மாறி மாறி ஆட்சிக்கு வரும்.
ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தம் 199 இடங்கள். 2018 டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலின் முடிவில் காங்கிரஸ் 99 இடத்திலும், பாஜக 73 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 6 இடத்திலும், சுயேட்சைகள் 13 இடத்திலும், மீதியுள்ள இடங்களை சிறு சிறு கட்சிகளும் கைப்பற்றின. இதில் ஆட்சி அமைப்பதற்கான இடங்களை விட கூடுதல் இடங்களை காங்கிரஸ் பெற்றதால் அந்தக் கட்சியே ஆட்சி அமைத்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வராக பதவிக்கு வரப்போகிறவர் இவர்தான் என ஒருவரை ராஜஸ்தானின்பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்த நிலையில் அதற்கு நேர் எதிரான இன்னொருவரை பதவியில் அமர்த்தியுள்ளது காங்கிரஸ் கட்சி தலைமை.
காங்கிரஸ் கட்சியின் வரலாறு என்றுமே வித்தியாசமானது. ஊழல் புகார் கூறி யாரை கட்சியில் இருந்து ஓரம் கட்டினார்களோ அவரையே அழைத்து வந்து மீண்டும் பதவி தந்து சிம்மாசனத்தில் அமரவைத்து அழகு பார்ப்பது அதன் வழக்கம். அந்த சிம்மாசனத்துக்காக உண்மையாக உழைத்தவர்கள் தெருவில் நிற்பார்கள். அப்படித்தான் மாநில அரசியலில் ஓரம் கட்டிவைக்கப்பட்டவர், முதல்வராக தேர்வு செய்யப்பட்டு மீண்டும் பதவிக்கு வருகிறார்... அசோக்கெலாட். தீவிரமாக உழைத்த இளம் தலைவரான சச்சின் துணை முதல்வராகியுள்ளார்.
1951ல் இருந்து 1990 வரை ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. 1952ல் காங்கிரஸை சேர்ந்த ஹீராலால் சாஸ்திரி, அதன்பின் வெங்கடாச்சாரி, அடுத்து ஜெய் நாராயணன் வியாஸ், பின்பு டீக்காராமன், அதற்கடுத்து மோகன்லால் சுகாத்தியா, பிறகு பர்கத்துல்லா கான், ஹரி தேவ் ஜோஷ், ஜெகன்நாத், ஷிவ் சரண் மத்தூர், ஹீரா லால் தேவ்பூரா, ஹரி தேவ் ஜோசி என மாறி மாறி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தனர். மோகன்லால் சுகாத்தியா 1954ல் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். அது முதல் தொடர்ச்சியாக 17 ஆண்டுகள், அதாவது 1971 வரை முதலமைச்சராக பதவியில் இருந்தார். இவர் காலத்தில்தான் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி பாதையில் தட்டுத் தடுமாறி எழத்துவங்கியது. மாடர்ன் ராஜஸ்தானின் உருவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டியவர் இவர் என்கிறது ராஜஸ்தானின் வரலாறு.
இந்திராகாந்தி அம்மையாரால் நாட்டில் நெருக்கடி நிலை அறிமுகப்படுத்தப்பட்டு பின் அது திரும்பப் பெறப்பட்ட பின் நடைபெற்ற தேர்தலில் ஜெயபிரகாஷ் நாராயணன் தொடங்கிய ஜனதாதளம் கட்சி, ராஜஸ்தானில் காங்கிரஸ் சரித்திரத்தை உடைத்தது. 1977ல் ஜனதா தளத்தின் சார்பில் பைரன் சிங் ஷெகாவத் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார். 30 மாதங்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தார். மத்தியில் ஜனதா கட்சியில் ஏற்பட்ட தலைமை மோதலால் ஆட்சி கலைந்தது. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் 1980ல் ராஜஸ்தானின் சட்டசபையை கலைத்தது, முதல்வர் பதவியில் இருந்து இறங்கினார் ஜனதா தளம் ஷெகாவத். அதன்பின் அவர் முறையாக பாஜகவில் இணைந்தார். அதன்பின் ஒன்பது ஆண்டுகள் காங்கிரஸோடு மோதிக்கொண்டு இருந்தார்.
பைரன் சிங் ஷெகாவத்
1989ல் பாஜக – ஜனதா தளம் கூட்டணி 138 இடங்களில் வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக பைரன் சிங் ஷெகாவத் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். இரண்டு ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை கலைந்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஒரு வருடம் ஜனாதிபதி வழியாக ஆட்சி நடத்திய காங்கிரஸ் 1993ல் தேர்தலை நடத்தவைத்தது. மீண்டும் பாஜக-ஜனதா தளம் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. கடந்த காலத்தை விட இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது பாஜக. வெற்றி பெற்ற 98 எம்.எல்.ஏகள் பைரன் சிங் ஷெகாவத்தை முதலமைச்சராக தேர்வு செய்ய அவர் பொறுப்பு ஏற்றார்.
இந்த முறை 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி செய்தார் ஷெகாவத். இந்துத்துவ வெறியை பைரன் சிங் ராஜஸ்தானில் வளர்த்தார். சாமானிய மக்களின் வாழ்க்கையில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அதனை கச்சிதமாக அறுவடை செய்தது காங்கிரஸ் கட்சி. 1998ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேசிய அரசியலில் இருந்த அசோக்கெலாட்டை மாநில அரசியலுக்கு அனுப்பி அவருக்கு முதலமைச்சர் நாற்காலியை தந்தது. அப்போது ஒரு முறை கூட எம்.எல்.ஏ ஆகாமலேயே முதல்வர் வாய்ப்பைப் பெற்றார் அசோக் கெலாட். இப்போதும் அவர்தான் முதல்வராகியிருக்கிறார்.
அந்த அளவுக்கு இவர் மதிக்கப்பட காரணம் என்ன? அரசியலில் இவர் வளர்ந்து வந்த கதை என்ன? அப்போது முதல்வராக என்ன சாதித்தார், இப்போது முதல்வராக இவரிடம் என்ன எதிர்பார்க்கலாம்? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
முந்தைய பகுதி :
முத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்! முதல்வரைத் தெரியுமா #9
அடுத்த பகுதி:
பாஜகவை சமாளிக்க இவர்தான் சரி? - முதல்வரைத் தெரியுமா? #11