ஒரு சொல் எப்படியெல்லாம் தோன்றுகின்றது என்பதை ஆராய்ந்தால் அதன் அருமை விளங்கும். வாய்வழக்காகவோ இடுகுறியாகவோ ஏதேனும் காரணம் பற்றியோ தோன்றும் அச்சொல் அதன் பொருளிலிருந்து எப்போதும் வழுவாமல் பற்பல சொற்களை உருவாக்கிச் செல்கிறது. நாம் அறிய வேண்டியது அதன் வேராய் விளங்கும் ஒரு சொல்லைத்தான். அதனைப் பற்றிப் படர்ந்து மலரும் நூறு சொற்களை நாம் அதன் வழியிலேயே பொருள் கண்டுவிடலாம். எல்லாம் ஒரே தன்மையுடையனவாய் ஒரே பொருள் நிழலில் திகழ்வனவாய் விளங்கக் காணலாம்.
வாழ் என்ற ஒரு சொல்லை எடுத்துக்கொள்வோம். எத்துணை அழகிய பொருள் பொதிந்த நற்சொல் ! வாழ் என்ற சொல்லுக்கு மாற்றான வேறு சொல்லே இல்லை என்று கூறலாம். அச்சொல் ஒன்றின் உயிர்த்திருக்கும் தன்மையைச் சொல்கிறது. பிழைத்திருந்து ஆற்றுவனவெல்லாம் ஆற்றியிருக்கச் சொல்கிறது. வாழ் என்று வாழ்த்துகிறது. அதனால் வாழ்க, வாழி, வாழிய, வாழியர் என்று வாயார வாழ்த்துகிறோம். வாழ்க என்பதுதான் மனமுவந்த வாழ்த்துரை. பெருங்காப்பியத்தின் தொடக்கம் வாழ்த்துச் செய்யுள்களோடு தொடங்கும். வாழ்க வாழ்க என்ற முழக்கத்தால் ஆனது நம் அரசியல் களம்.
வாழ் என்ற சொல்லிலிருந்துதான் வாழை என்ற சொல்லும் வருகிறது. வாழையைப் போல் வாழவேண்டும் என்றுதான் ‘வாழையடி வாழையாக வாழ்க’ என்று வாழ்த்துகிறார்கள். வாழ் என்ற சொல்லுக்கு வாழை என்னும் அம்மரம் எத்துணைப் பொருட்பொருத்தம் என்று எண்ணிப் பாருங்கள்.
வாழை என்ற சொல் வாழ்வின் பச்சைப்பெரும்பொருளாக விளங்குகிறது. ஒரே ஒரு வேர்த்தன்மைய்டைய சொல் அதன் பொருள் பிறழாமல் அதனுடன் நெருங்கிய தொடர்புடைய இன்னொரு பொருளுக்குப் பெயராகி நிற்கிறது.
வாழையினடியில் வாழைக்கன்று தோன்றும். தன்னிழலில் தன் கன்று வாழ இடமளிப்பது வாழை. மரங்களில் பெரிய மரம் என்று கருதப்படுகின்ற ஆல மரத்தடியில் இன்னொரு மரம் செழித்து வளர முடியுமா ? வேற்று மரத்தை மட்டுமில்லை, தன்னடியில் தன்னினத்தைச் சேர்ந்த மற்றோர் ஆல மரத்தைக்கூட வாழ விடாது. விழுது விழுதாக மண்ணிலிறங்கிய பிறகு தானொன்றே தனிமரமாக ஆல மரம் வளர்கிறது.
ஆந்திர மாநிலத்தின் கதிரி என்ற சிறு நகரத்திற்கு அருகே மதன பள்ளி செல்லும் வழியில் “திம்மம்மா மாரிமண்ணு” என்ற ஆலமரம் இருக்கிறது. ஆனந்தப்பூர் மாவட்டத்தின் வனத்துறைக் காப்பில் இருக்கும் அம்மரம்தான் உலகின் மிகப்பெரிய ஆலமரம் என்று கூறுகிறார்கள். நான் அவ்விடத்திற்குச் சென்றிருக்கிறேன். அடிமரம் காணமுடியாதபடி ஆயிரம் விழுதுகள் பரவியிருக்கின்றன. அதடியில் வேறு மரங்களும் இல்லை. விரைவில் வளர்ந்தழியும் புல்பூண்டுகள்தாம் காணப்படுகின்றன. தானொன்றே தனியாக வாழும் ஆலமரமெங்கே ? தன்னடியில் தன் கன்றுகளை வாழவைக்கும் வாழை மரமெங்கே ? வாழ் என்ற சொல்லின் தனிப்பெரும் பொருளாக வாழை மரத்திற்குச் சூட்டப்பட்ட பெயர் விளங்குகிறது. இப்படித்தான் ஒரு சொல் அதனோடு உயிரும் உடலும் பொருந்துமாறு பொருள் தொடர்புடைய இன்னொன்றுக்கும் பெயராகும்.
வாழ்வதால்தான் வாழ்வு. வாழ்வதுதான் வாழ்க்கை. ஆயுள் என்பது வடசொல். அதனைத் தமிழில் ‘வாழ்நாள்’ என்று சொல்ல வேண்டும். வாழ்கின்ற நாளைத்தான் வாழ்ந்த நாளாகக் கணக்கில்கொள்ள வேண்டும் என்கின்ற அரும்பொருள் பொதிந்த தமிழ்ச்சொல் வாழ்நாள்.
தனியொருவர்க்கு இங்கே என்ன வாழ்க்கை இருக்க முடியும் ? அவர்க்குத் துணை வேண்டும். அத்துணையால்தான் வாழ முடியும். அதனால் மனைவியை ‘வாழ்க்கைத் துணை’ என்று வாயாரப் புகழ்கிறார் வள்ளுவர். வாழ்க்கைத் துணைநலம் என்று அதிகாரமே வகுத்தார். ஏதேனும் நன்மையாக நடந்துவிட்டால் “அவனுக்கு வந்த வாழ்வைப் பாரேன்…” என்பார்கள். எவ்வொரு நன்மையும் வாழ்க்கையாக மாறுவது.
தமிழில் வாழ்வு என்பது உயிரோடிருத்தல் இல்லை. அதனால்தான் வாழ்வுக்கு எதிர்ச்சொல் சாவு இல்லை. வாழ்வுக்குரிய எதிர்ச்சொல் தாழ்வு. வாழாமல் தாழ்ந்து கிடப்பதைத்தான் எதிர்ச்சொல்லாக்கினோம். வாழ்வுக்கும் சரி, உயர்வுக்கும் சரி, தாழ்வே எதிர்ச்சொல். எனில் வாழ்வென்பதே உயர்வு. வாழ்த்துவதும் வாழ்விப்பதுமே ஒருவர் செய்யத்தகுத்த தகைமையான செயல்கள். வாழ்த்துவது என்றால் கடவுளையும் வாழ்த்தலாம்.
ஒரு சொல் எத்துணைப் பொருட்செறிவோடும் அடர்த்தியோடும் அருமையோடும் மொழியில் வாழ்கின்றது என்பதற்கு ‘வாழ்’ என்ற சொல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
முந்தைய பகுதி:
“புலிப்பறழ்” என்ற சொல்லுக்கு பொருள் தெரியுமா??? -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 18
அடுத்த பகுதி: