Skip to main content

பம்பரத் தாத்தா வர்றாருடோய்... - சிறுவர்களைக் கவர்ந்த வைகோ! - கடந்த காலத் தேர்தல் கதைகள் #3

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

வைகோ... இன்று வரை இந்திய நாடாளுமன்றம் கண்டுள்ள  முக்கியமான, சிறந்த உறுப்பினர்களில் ஒருவர். அவரது கூட்டணி மாற்றங்கள், கட்சி செயல்பாடுகளில் விமர்சனம் உள்ளவர்கள் கூட அவரது நாடாளுமன்ற செயல்பாடுகளை பாராட்டுவார்கள். அவர் கடைசியாக நாடாளுமன்றம் சென்று பதினைந்து ஆண்டுகளாகிவிட்டாலும் இன்றும் அவரது செயல்பாடுகள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனதில் இடம் பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட பார்லியமென்டேரியனான வைகோ, இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. திமுக கூட்டணியில் மதிமுக ஈரோட்டில் மட்டுமே போட்டியிடுகிறது. மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதியளித்துள்ளது திமுக. வைகோ மீண்டும் நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்பது மதிமுக தொண்டர்களையும் தாண்டிய பலரின் எதிர்பார்ப்பு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் வைகோ. தமிழகம் முழுவதும் சென்று கூட்டணிக்கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்தார். 2014இல் அவரது பிரச்சாரம் எப்படி இருந்தது... கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

 

vaiko



ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான வைகோ, தானே நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்களில் அப்போது அவர் பிரச்சாரம் செய்தபோது உடன் இருந்தோம். குண்டும் குழியுமான சாலைகளிலும் கூட அவரது பிரச்சார வேன் அசராமல் பயணித்தது. ‘ஏழைகளின் கட்சி’ என அவரே சொல்வது போல, அந்த வேனில் படுக்கை வசதியோ, டாய்லெட் வசதியோ எதுவும் இல்லை. இயற்கை உபாதைகளுக்கும் கூட, சாதாரண கிராமவாசி போல  முட்செடிகள் பக்கம்  அவர் ஒதுங்குகினார். 

 

vaiko



வைகோ செல்லும் ஒவ்வொரு பிரச்சார ஸ்பாட்டிலும் டிரம்ஸ் அடிக்கிறார்கள். 500 வாலா பட்டாசு வெடிக்கிறார்கள். ஊர்த்தலைவரோ, கூட்டணி கட்சி பொறுப்பாளரோ யாராவது ஓரிருவர் சால்வை அணிவிக்கிறார்கள். மற்றபடி, பெரிய அளவிலெல்லாம் ஆட்களைத் திரட்டவில்லை. "பம்பரத் தாத்தா வர்றாரு டோய்..'' என்று பள்ளிச் சிறுவர்கள் பாசமாக ஓடி வந்தார்கள். யதார்த்தமான சூழலில், மெல்லிய குரலில் வெகு இயல்பாகப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். கூட்டணி கட்சிகளின் பெயரைச் சொல்லும் போது, 'எனது அருமை சகோதரர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க. ஆதரவோடு..' என்பதை அழுத்திச் சொல்கிறார். பத்து பேரோ, இருபது பேரோ நிற்கும் இடங்களில் 1 நிமிடத்துக்கும் குறைவாக பேச்சு,  ஐம்பது பேருக்கும் மேல் கூடிவிட்டால், 2 நிமிடங்கள் பேச்சு, எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டால், 8 நிமிடங்கள் வரை பேசினார். 

எழுச்சியே இல்லாத கிராமங்களில்  “தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது; மோடி பிரதமர் ஆவது உறுதி" என்ற சென்ற தேர்தலின் வழக்கமான பிரச்சாரத்தை அவர் மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் எதிர்ப்பையும்கூட தீவிரமாகக் காட்டாமல், "நான் அரசியல் கட்சிகளை இப்போது விமர்சிக்க விரும்பவில்லை.." என்று தவிர்த்துவிட்டார். வாக்களிக்கும் வயதினரைக் காட்டிலும் சிறுவர் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் "நான் குழந்தைகளை ரொம்ப பிரியமா நினைக்கிறவன்.. பம்பரம் பிள்ளைகள் விளையாடுறதுன்னு தேர்ந்தெடுத்தேன். இளம் பிள்ளைகள் இங்கே ரொம்பப் பேரு இருக்காங்க.. நீங்கதான் அப்பா, அம்மாகிட்ட சொல்லணும்..'' என்றார். எதிர்ப்படும் பெண்களிடம் "நான் தாய்மார்களை தெய்வமா நினைக்கிறவன்.. சாராயக் கடை, மதுக் கடைகளுக்கு எதிரா வெயில்லயும், மழையிலயும் 1500 கி.மீ. நடந்திருக்கேன்.. நீங்க டிவியில பார்த்திருப்பீங்க..'' என்று உணர்வுப்பூர்வமாகப் பேசினார். 

 

vaiko



அப்போது அங்கிருந்த நந்திரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் நம்மிடம், "விஜயகாந்தை பாருங்க.. முக்கியமான ஊருல மட்டும் பிரச்சாரம் பண்ணுறாரு.. எம்புட்டு கூட்டம் கூடுது.. டி.வி.ல பார்க்கிறோம்ல.. நறுக்குன்னு நாலு இடத்துல பேசிட்டு போறத விட்டுட்டு.. ஆளுங்க  இல்லாத நேரத்துல..  பட்டிக்காட்டுல வந்து பிரச்சாரம் பண்ணி.. உடம்பை கெடுத்துக்கிட்டு.. டயத்தை வேஸ்ட் பண்ணுறாரு..'' என்றார் வைகோ மீது உண்மையான அக்கறை உள்ளவராக. 

"ஓட்டு யாருக்கு?'’ என்ற நமது கேள்விக்கு மீனாட்சிபுரம் கருத்தம்மா "இவரு பம்பரத்துக்கு போடச் சொல்லுறாரு. இனிமேதான் யோசிக்கணும், யாருக்கு போடறதுன்னு?'' என்று இழுக்க.. அவரது பக்கத்து வீட்டுக்காரரான முத்து மாரியம்மாளோ "என் புள்ளைக்கு மஞ்சள் காமாலை ஊசி போட்டாரு வைகோ.. அவருக்குத்தான் என் ஓட்டு..'' என்றார்.   

சின்னமூப்பன்பட்டி என்ற ஊரில் அந்த இரவு நேரத்திலும் ஓரளவுக்கு மக்கள் கூடியிருந்தார்கள். ஆரத்தி எடுக்க பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். கூட்டத்தைப் பார்த்து குஷியாகி "இது மாதிரி எந்த ஊருலயும் நான் கூட்டத்தைப் பார்க்கல.. நான் வெளிப்படையா பேசுறவன்.. என்கிட்ட ஒளிவு மறைவு கிடையாது..  மனசுல நினைச்சதை சொல்லுறவன்..'' என்ற வைகோ, "என்னைப் பத்தி நானே சொல்லிக்கிறதா?'' என்று சங்கோஜப்பட்டவாறே சில விஷயங்களை மக்கள் முன் வைத்தார் - "உங்க மனசுல வைகோ ரொம்ப நல்லவன், நம்மள மாதிரி ஏழைபாழைகள் சொன்னா உடனே செய்வான்ங்கிற நம்பிக்கை இருக்கு.. வெளிநாட்டுல யாராச்சும் விபத்துல மாட்டிக்கிட்டா.. ஏய் வைகோ வுக்கு ஒரு போனைப் போடுங்கிறாங்க.. நான் எந்தப் பதவியிலும் இல்லை. ஆனா.. எப்படியாவது பிரதமர்ட்டயோ, யார்ட்டயோ சொல்லி, அவங்கள காப்பாற்ற முயற்சி பண்ணுறேன். உலகத்துல உள்ள எல்லா தமிழர் களும் நமக்கு ஒருத்தன் இருக் கான்னு நினைக்கிறாங்க இல்லியா?"  

அதற்கு முந்திய தேர்தல் தோல்வி ஆறாத ரணமாக உள்ளுக்குள் இருந்ததோ என்னவோ?  பிரச்சாரத்தின்போது தனது உள்ளக் குமுறலை அடிக்கடி வெளிப்படுத்தினார் வைகோ - "போன எலக்ஷன்ல நின்னேன்.. வீட்டுக்கு வீடு பணம் கொடுத்தாங்க. பணத்துக்காக ஓட்டு போட்டு போன தடவை என்னை தோற்கடிச்சீங்க. இந்த தேர்தல்ல அதைவிட அதிக பணம் கொடுக்கப் போறாங்க. உங்க ஓட்டை விலைக்கு வாங்கப் போறாங்க. ஒரு ஓட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம்னு கொடுக்கப் போறாங்க. பணம் வீடு வீடா வரப் போகுது. வந்திரும்.. அதை தடுக்க முடியாது. அதனால.. நீங்க நல்லா யோசனை பண்ணி, எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்'' என்று உருக்கமாகப் பேசினார். 

இடையில் ஒரு முறை பிரச்சாரத்துக்காக விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு வைகோ சென்றபோது, அவருடன் வந்த கட்சியினரின் வாகனத்தை பெரிய வள்ளிக்குளம் என்ற இடத்தில் சோதனை செய்ய முற்பட்டது பறக்கும்படை. வாக்குவாதம் உண்டாகி "காரை விட்டு கீழே இறங்குங்கடா'' என்று போலீஸ்  அக்கட்சியினரிடம் ஒருமையில் பேசும் அளவுக்கானது. போலீசாருக்கும் தொண்டர்களுக்குமிடையே பிரச்சினை வலுத்ததைக் கண்ட வைகோ, வேனிலிருந்து கீழே இறங்கி "எதற்கு அநாகரிகமாக நடந்து கொள்கின்றீர்கள்? மரியாதைக் குறைவாக பேசுகின்றீர்கள்?" என்று போலீஸாரிடம் நியாயம் கேட்க, போலீசாரும் "நாங்க என்ன மரியாதைக் குறைவாக நடந்துகொண்டோம்?'' என்று வைகோவின் முகத்துக்கு நேராகக் கேட்டுவிட்டனர். உஷ்ணமான தொண்டர்கள் "தலைவருக்கே அவமரியாதையா?" என்று குரல் எழுப்ப, வைகோவும் "நாங்க கொண்டு வந்த சூட்கேஸை நல்லா செக் பண்ணிக்கோங்க...'' என்று திறந்து காட்டி, கட்சியினருடன் சாலையில் அமர்ந்துவிட்டார். இந்த மறியலால் விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் அப்போது சுமார் 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த விவகாரம் நடக்கும் முன்பு ஒருமுறை "எங்களை செக் பண்ணுறீங்கள்ல... முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை செக் பண்ணுவீங்களா?" என்று தனது வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது வைகோ பேசியதும், அதற்கு தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் "முதலமைச்சரின் ஹெலிகாப்டர் என்றாலும் சோதனையிடுவோம்'’ என்று சொல்லியதும், அ.தி.மு.க. தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே, வைகோவின் பிரச்சார பயணத்தில் போலீஸ் இத்தனை கெடுபிடி காட்டியதாம். இப்போது ஜெயலலிதா இல்லை, அதிமுகவும் ஒன்றாக இல்லை. மதிமுக, திமுகவுடன் நிற்கிறது.

சென்ற தேர்தல் பிரச்சாரத்தில் தனது சாதனைகளை மட்டுமல்ல.. வேதனையையும் முன் வைத்தார் வைகோ! எவ்விதச் சலனமுமின்றி கேட்டு வைத்தார்கள் வாக்காளர்கள். ஆனால், மீண்டும் அவருக்கு தோல்வியையே பரிசளித்தார்கள். இந்தத் தேர்தலில், கடந்த இரண்டு முறையாக தன்னை எதிர்த்து நின்று, அதில் ஒரு முறை வென்றும்விட்ட காங்கிரசின் மாணிக் தாகூருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வைகோ. ஆரம்பத்தில் சொன்னதுதான், அவரது கூட்டணி மாற்றங்களில் குறை காணலாம். ஆனால், இன்று வரை இந்திய நாடாளுமன்றம் கண்டுள்ள  முக்கியமான, சிறந்த உறுப்பினர்களில் ஒருவர்.


-சி.என்.இராமகிருஷ்ணன்

படம் : அசோக்

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.