ஐபிஎல் - 2024 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி அண்மையில் வாங்கியிருந்த நிலையில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை பெற்றுக் கொடுத்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து விடுவித்து ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியது
அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம், ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் சமீபத்திய செயல்பாடுகள் குறைந்திருப்பதாலேயே அவரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “இந்த விவகாரத்தில் எது சரி? எது தவறு? என்று எதையும் நாம் ஆராய வேண்டாம். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அணியின் நலனுக்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள். ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பவர். ஆனால், ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மாவின் பங்களிப்பு குறிப்பாக பேட்டிங்கில் கூட சற்று குறைந்துவிட்டது. அவர் முன்பு அணிக்கு பேட்டிங் மூலம் அதிக ரன்களை குவித்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அது குறைந்துவிட்டது.
அதன் காரணமாகத்தான் கடந்த 3 வருடத்தில் மும்பை அணி 9வது, 10வது இடத்தை பிடித்திருந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் போராடி பிளே ஆஃப் வரை மட்டுமே சென்றது. ஆனாலும், அந்த அணி வீரர்களிடம் முன்பு இருந்து உற்சாகத்தை தற்போது பார்க்கவில்லை. ரோஹித் சர்மா இந்திய அணிக்கும், ஐபிஎல் தொடரிலும் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் தொடர்ச்சியாக விளையாடியதால் சற்று களைப்படைந்திருக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், அவர் ஒரு இளம் வீரர்.
அத்துடன் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியை இரண்டு முறை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றிருக்கிறார். முதல் வருடம் கோப்பையை வென்ற பாண்ட்யா அடுத்த 2வது வருடமும் இறுதி போட்டி வரை அழைத்து சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியிருக்கிறார். அதனால் தான், அவரை கேப்டனாக நியமித்து இருக்கிறார்கள். தற்போது மும்பை அணிக்கு புதுமையாக சிந்திக்க கூடிய ஒருவர் தேவைப்படுகிறது. அதனை அவரால் கொண்டு வர முடியும். எனவே, இந்த முடிவை அந்த அணியின் நிர்வாகம் எடுத்திருக்கிறது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி பலன் அடையுமே தவிர பாதகமாக இருக்காது என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.