தேவி கோயிலில் நடந்த வினோத திருவிழாவில் பெண்களை போல் வேடமணிந்து வரும் ஆண்களின் வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு அருகே உள்ள கொட்டங்குளகராவில் நீண்டகாலமாக தேவி கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சமயவிளக்கு பூஜை என்கிற பெயரில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இது மலையாள மாதமான மீனத்தின் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில், மார்ச் 2ஆம் பாதியில் கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான ஆண்கள், தங்களை பெண்கள் போன்று அலங்காரம் செய்துகொண்டு இரவு முழுவதும் கோயிலைச் சுற்றி வலம் வருகின்றனர். அத்தகைய ஆண்கள் சேலை அணிந்துகொண்டு பளபளக்கும் நகைகளுடன் அழகான ஒப்பனையுடன் இந்த தனித்துவமான சடங்கில் பங்கேற்கிறார்கள். அதுமட்டுமின்றி, கோயிலில் ஐந்து முக விளக்கை ஏற்றி சாமி தரிசனம் செய்வது இவர்களது ஐதீகம். இதனை ஒரு வேண்டுதலாகக் கருதி அதனை நிறைவேற்றி வருகின்றனர். இதன் மூலம் தங்களது வீடுகளில் செல்வம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதே சமயம், இந்த திருவிழாவில் சிறப்பாக அலங்காரம் செய்த ஆண்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டு நடந்த திருவிழாவின்போது பெண் வேடமிட்டு முதல் பரிசை வென்ற ஆணின் புகைப்படத்தை பகிர்ந்த இந்திய ரயில்வே துறை அதிகாரி ஒருவர், இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.