ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசன் இன்று கோலாகலத்துடன் துவங்கியுள்ளது. போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கப்படும் சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றி ஐபிஎல்லுக்கான ஹைப் ஏற்றுகின்றன. அதே வேளையில் ஏலத்தின் போது எடுக்கப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதும் மாற்று வீரர் அணியில் சேர்க்கப்படுவதுமான நிகழ்வுகளும் தொடர்கின்றன.
சென்னை அணியைப் பொறுத்தவரை கேப்டன் தோனிக்கு இது கடைசி ஐபிஎல்லாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதேசமயத்தில் அவர் இன்னும் 2 முதல் 3 சீசன்கள் விளையாடலாம் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா விலகிய நிலையில் மாற்று வீரரை தேர்ந்தெடுப்பது குறித்தான ஆலோசனைகள் நடைபெற்றது. இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சந்தீப் வாரியார் ரு.50 லட்சத்திற்கு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி வரும் 2 ஆம் தேதி பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.
அதேபோல் பெங்களூர் அணியிலும், இந்த ஐபிஎல் சீசனின் முதல் 7 போட்டிகளில் ஜோஷ் ஹேசில்வுட் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் அவர் ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு பிறகே இந்தியாவிற்கு வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா வந்தும், ஹேசில்வுட் பயிற்சி எடுத்துக்கொண்டு அணிக்கு திரும்ப ஒரு வார காலம் ஆகலாம் எனக் கூறப்படும் நிலையில் முதல் 7 போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெங்களூர் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
டெல்லி அணியில் கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட் தற்போது ஓய்வில் இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான அபிஷேக் போரல் சேர்க்கப்பட்டுள்ளார்.