மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த ஞாயிறன்று நடந்த போட்டியில், அதிரடியாக விளையாடினார் ரோகித் சர்மா. ஹிட்மேன் என செல்லமாக அழைக்கப்படும் இவர் 152 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அதிரடி ஆட்டத்தில் 15 பவுண்டரிகளும், எட்டு சிக்ஸர்களும் அடக்கம். இதன்மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 194 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இதற்கு முன் 190 சிக்ஸர்கள் அடித்து, அதிக சிக்ஸர்கள் அடித்தோரின் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருந்தார். தற்போது அந்த இடத்தை 194 சிக்ஸர்களுடன் ரோகித் சர்மா பிடித்துக் கொண்டார். இந்நிலையில், 195 சிக்ஸர்களை அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கும் சச்சின் தென்டுல்கரின் சாதனையை விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கவிருக்கும் போட்டியில் ரோகித்சர்மா சமன் செய்வாரா அல்லது முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்திய அளவில் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முன்னாள் கேப்டன் தோனிதான். அவர் இதுவரை 217 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.
சர்வதேச நாடுகளுடனான பட்டியலில் பாகிஸ்தானின் சாகித் அஃப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் 275 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும், இலங்கையின் ஜெயசூர்யா 270 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் டாப் ஃபைவ்வுக்குள் இருக்கும் ஒரே இந்தியர் தோனி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.