இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கடுமையான இலக்கை எதிர்கொண்டபோது தொடக்க வீரர்கள் மூவர் அடுத்தடுத்து வெளியேறியது நெருக்கடியைத் தந்தது. அதன்பிறகு ஜோடிசேர்ந்த ராகுல், பாண்ட் இணை நிலைமையை சீராக்கியது. ராகுல் 149 ரன்களுடனும், ரிஷப் பாண்ட் 114 ரன்களுடனும் வெளியேற ஆட்டத்தைத் தன்வசமாக்கியது இங்கிலாந்து அணி.
இந்தத் தோல்வி குறித்து இந்திய அணியையும், கேப்டன் கோலியையும் பலரும் விமர்சித்து வருகின்றனர். கடைசி போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பெரிதும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியில், கேப்டன் கோலிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி ஆதரவும், அறிவுரையும் வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து விரிவாகப் பேசியுள்ள அவர், “போஸ்ட்-மார்டெம் செய்யாமல் இங்கு நாம் திறமைகளைக் கண்டுணர வேண்டியுள்ளது. எல்லா அணிகளும் முன்னேற்றத்தை நோக்கி ஓட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்த சீசனில் சதீஸ்வர் புஜாரா, ரகானே மற்றும் கோலியின் பேட்டிங், அவர்கள் 10 மடங்கு சிறப்பான வீரர்கள் என்பதை உணர்த்தியது. இருந்தாலும், அணிக்குத் தேவையான சிறந்த வீரர்களைக் கொண்டுவர கோலிதான் முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு கேப்டனுக்கும் உள்ள மிகப்பெரிய கடமை இது. சக வீரர்களின் தோள்களில் கைகளைப் போட்டுக்கொள்ள கேப்டன் தயாராக இருக்க வேண்டும். அப்படி நடந்தால் வீரர்களின் விளையாட்டில் முன்னேற்றம் ஏற்படும். அந்த முன்னேற்றத்தைக் கண்கூடாக பார்க்க முடியும். சரியான திறமைசாலிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம்” என தெரிவித்துள்ளார்.