
ஓம் சரணவனபவ யூடியூப் சேனல் வாயிலாக ஆன்மிக கருத்துகளை ஆன்மிகவாதிகள் பலர் பேசி வருகின்றனர், அந்த வகையில் ‘கந்தர்வ நாடி’ ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் குல தெய்வ வழிபாடு அவசியமானதா என்பதைப் பற்றி தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வ வழிபாடு இருக்கும். ஒரு வீட்டில் சுப காரியங்கள் தடைபடுவது அல்லது தள்ளிப்போவது, எதிர்பார நோய்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு ஏற்படுவது, குழந்தைகள் மாற்றுத்திறனாளியாகப் பிறப்பது என இவை அனைத்திற்கும் காரணம் குலதெய்வ வழிபாடு சரியாக அமையாததுதான். ஒரு வீட்டில் தாத்தா, அப்பா, மகன் என மூவரின் ஜாதகத்தைப் பார்த்தால், 9 கிரகத்தில் ஒரு கிரகம் உச்சமாக பலன் கொடுக்கக் கூடிய சாதக இடத்தில் இருக்கும். அந்த கிரகம்தான் குல தெய்வத்தை நிர்ணயம் செய்வது.
5ஆம் இடம் இஷ்ட தெய்வத்தையும் 9ஆம் இடம் குல தெய்வத்தையும் குறிக்கும். அதற்குக் காரணம் 9ஆம் இடம் தந்தையைக் குறிக்கும், குல தெய்வ வழிபாடும் தந்தை வழியாக வருவதுதான். குல தெய்வம் ஆண் மற்றும் பெண் தெய்வமாக இருக்கலாம். குல தெய்வத்தை ஜாதகத்தை வைத்தும் கண்டுபிடிக்கலாம். குல தெய்வ வழிபாடு இல்லாமல் போகும் குடும்பத்தில் குல தெய்வத்தின் சாபம் வர நேரிடும். குல தெய்வ வழிபாடு தெரியாதவர்கள் திருவள்ளூரில் உள்ள வீரராக சுவாமியை அமாவாசையில் தரிசனம் செய்ய வேண்டும். அப்படிச் செய்வது குல தெய்வ வழிபாட்டிற்குச் சமம்.
ஒவ்வொரு ஆண்டும் குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது. அதனால் பலவித செல்வாக்கு பெருகும். இப்போது இருப்பவர்கள் பெரும்பாலும் குல தெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். சிலர் குல தெய்வம் யார் என்று தெரியாமல் இருக்கிறார்கள். மூன்று தலைமுறையாக வழிபடுவதுதான் குல தெய்வம். ஒரு தலைமுறை என்பது 33 வருடம். மூன்று தலைமுறைக்கு 100 வருடம். இந்த 100 வருடத்தில் வழிபட்டு வரும் தெய்வம்தான் குல தெய்வம். குல தெய்வத்தின் அருளைப் பெற்றால் வீட்டில் விசேஷங்கள் நடக்கும். இல்லையென்றால் எதிர்பாராத பிரச்சனைகள் வரும்.
9ஆம் இடத்திற்கு விரய ஸ்தானமாக அமைவது 8ஆம் பாகம். 8ஆம் பாகம் என்பது எதிர்பாராத விபத்து. இந்த விபத்து இருந்து காப்பாற்றிக்கொள்ள கண்டிப்பாக குல தெய்வத்தின் அருள் வேண்டும். 9ஆம் பாகத்தின் அருள் இருந்தால் எல்லா விதமான பிரச்சனைகளையும் கடந்து வர முடியும். மற்ற பாகங்கள் சரியாக அமைந்து 9ஆம் பாகமான தெய்வ அனுகூலம் சரியாக அமையவில்லையென்றால் எந்தவித முன்னேற்றமும் வராது. சில நேரங்களில் தோல்வி வருவதற்கும் குல தெய்வத்தின் சாபம்தான் காரணம். தெய்வ அனுகூலம் இருந்தால் வெற்றி பெற முடியும். படகும் கப்பலும் கடலில் செல்ல காற்று வீசக்கூடிய திசைதான் முக்கியம். தெய்வ அருள் என்பது உங்களுக்குச் சாதகமான காற்று வீசுவதுபோல் இருக்கும். அப்படிப்பட்ட தெய்வ அனுகூலத்தைப் பெறுவதற்கு குல தெய்வ வழிபாடு மிக மிக முக்கியம் என்றார்.