பொருளாதார நிலை சிறப்பானதாக இருந்தால்தான் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களின் பொருளாதார நிலை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகவே இருக்கிறது. பத்து ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளுக்கு நூறு ரூபாய் லாபம் கிடைத்தால் அது அதிர்ஷ்டம். ஆனால் நூறு ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளுக்கு சில நேரங்களில் ஐம்பது ரூபாய் மட்டும் கிடைக்கப் பெற்று நஷ்டமடைய நேரிடும். அதுபோலதான் ஷேர் மார்க்கெட் என்பதும். பலர் தங்களின் சேமிப்புப் பணத்தை லாபகரமான விஷயங்களில் முதலீடு செய்து முன்னேற்றமடைய விரும்புகிறார்கள்.
சிலர் தங்கம் போன்றவற்றிலும், சிலர் ஷேர் மார்க்கெட் போன்றவற்றிலும் முதலீடு செய்கிறார்கள்.ஆனாலும் விலை ஏறும்போது இவற்றில் லாபமும், விலை குறையும்போது நஷ்டமும் அடைய நேரிடுகிறது.நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்து ஒருவரால் லாபத்தை அடைய முடியுமா அல்லது நஷ்டம் உண்டாகுமா என ஜோதிடரீதியாகப் பார்ப்போம்.நவகிரகங்களில் குரு பகவான் தனகாரகன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் குரு பலம்பெற்று அமைந்திருந்தால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல், ஷேர், ஏஜென்சி போன்றவை லாபமளிக்கும். குரு பகவான் பலமிழந்திருந்தாலும், வக்ரம் பெற்றிருந்தாலும் பணவிஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறமுடியாத நிலை ஏற்படும். நம்பியவர்களே ஏமாற்றக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
ஒருவருக்கு எதிர்பாராத திடீர் தனச்சேர்க்கை எப்படி உண்டாகிறது என ஜாதகரீதியாகப் பார்த்தோமானால், உபஜெய ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 3, 6, 10, 11-ஆம் வீடுகள் பலம்பெறுகின்றபோது எதிர்பாராத திடீர் தனயோகம் உண்டாகி வாழ்க்கை முன்னேற்றம் அடைகிறது. அதிலும் குறிப்பாக 6, 11-ஆம் வீடுகள் பலம்பெறுகின்றபோது திடீர் அதிர்ஷ்டங்கள் தேடிவருகின்றன.உபஜெய ஸ்தானத்தில் பாவகிரகங்களாகிய சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது, தேய்பிறைச் சந்திரன், பாவிகள் சேர்க்கைப் பெற்ற புதன் போன்றவை நட்புநிலையுடன் பலம்பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.
நவகிரகங்களில் யூகிக்கமுடியாத அளவுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடியவர் ராகு பகவானாவார். இந்த ராகு உபஜெய ஸ்தானங்களில் அமையப்பெற்று, ராகு நின்ற வீட்டதிபதியும் பலம்பெறுமானால் எதிர்பாராத தனவரவுகள்மூலம் வாழ்க்கைத் தரமானது திடீரென்று உயரும். அதுபோல ஒருவர் ஜாதகத்தில் 6, 11-க்கு அதிபதிகள் பலம்பெறுவதும், பரிவர்த்தனை பெறுவதும் நல்ல அமைப்பாகும். திடீர் அதிர்ஷ்டத்தைப்பற்றிப் பார்க்கின்றபோது, தன ஸ்தானமான 2-ஆம் வீடு மற்றும் 5, 9-ஆம் வீடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2, 5, 9, 11-க்கு அதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்றாலும், இணைந்து பலம்பெற்றிருந்தாலும் திடீர் தனச்சேர்க்கையானது அமையும்.
சூரியன் 6 அல்லது 11-ஆம் வீட்டில் பலம் பெற்று, 5, 9-ஆம் வீடுகள் சாதகமாக இருந்தால் தந்தை, மூதாதையர்கள் மற்றும் அரசுவழியில் திடீர் தனயோகம், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஜாதகரைத் தேடிவரும்.சந்திரன் 6 அல்லது 11-ல் பலம்பெற்றிருந்தால் உணவு தானியங்கள், தண்ணீர், பயணங்கள் மூலமாகவும் எதிர்பாராத லாபங்கள், தனச்சேர்க்கைகள் உண்டாகும். செவ்வாய் பகவான் 6 அல்லது 11-ல் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை மூலமாக எதிர்பாராத யோகம், கௌரவப் பதவிகள் தேடிவந்து வாழ்க்கைத் தரம் உயரக்கூடிய வாய்ப்பு கிட்டும்.
அதுவே 6, 11-க்கு அதிபதிகள் விரயாதிபதி சேர்க்கை பெறுவதும், பாதகாதிபதி சேர்க்கை பெறுவதும், விரய ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தானத்தில் அமையப் பெறுவதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாவதற்குத் தடை ஏற்படும். நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது- முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. மேஷம், கடகம், துலாம், மகரம் போன்ற லக்னக்காரர்களுக்கு லாப ஸ்தானமான 11-ஆம் இடம் பாதக ஸ்தானம் என்பதனால் பங்குச் சந்தை, லாட்டரி, ஸ்பெகுலேஷன் போன்ற விஷயங்களில் ஈடுபடும்போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.
தன யோகத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும் காலங்களில் கோட்சார ரீதியாக கிரக நிலைகளின் சஞ்சாரமும் சாதகமாக இருந்தால்- எடுத்துக்காட்டாக சனி, 3, 6, 11-லும், குரு 2, 5, 7, 9, 11-லும் சஞ்சரிக்குமானால், அந்த யோகத்தின் பலன் பலமானதாக அமைந்து சிறப்பான முன்னேற்றத்தைக் கொடுக்கும். அதுவே அஷ்டமச்சனி, ஏழரைச்சனி நடைபெற்றாலும், சனி சாதகமின்றி சஞ்சரித்தாலும் அந்த யோகத்தின் பலமானது குறைந்து லாபம் தடைப்படும்.