Skip to main content

வெற்றி தரும் விநாயகர்

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

எந்தக் கடவுளை வழிபட்டாலும், முதல் கடவுளாக விநாயகரை வழிபடவேண்டும். அப்படி வழிபட்டால், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். எந்த சுபகாரியங்களைச் செய்யும்போதும் விநாயகரை வழிபட்டுத் தொடங்கினால் அந்த காரியம் நல்ல முறையில் நடக்கும். விநாயகரை மதிய வேளையில் வழிபட்டால் நன்மைகள் நடக்கும். விநாயகருக்குப் பிடித்தவை கொய்யாப்பழம், வாழைப்பழம், தேங்காய், மைதாவில் செய்த பூந்தி, லட்டு ஆகியவை. அவரை எருக்கம்பூ மாலையை வைத்து வழிபடவேண்டும். வீட்டில் பூ, பழம் வைத்து வழிபடவேண்டும். பொருளாதார விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண வேண்டுமானால், விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகருக்குப் பூஜை செய்ய வேண்டும்.

 

vinayakar

பணப்பிரச்சினை, வீட்டில் கணவன்- மனைவிக்கிடையே சண்டை போன்றவை இருந்தால் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை தவறாமல் வணங்கவேண்டும். விநாயகர் சிலை அல்லது அவரின் படத்தை வைத்து சந்தனம், குங்குமம் வைத்து, தூபம் ஏற்றி வழிபடவேண்டும். பூ, பழம், லட்டு ஆகியவற்றை பூஜையில் வைக்க வேண்டும். பூஜையின்போது விநாயகரின் முகம் கிழக்கு அல்லது மேற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் கருப்புநிற ஆடை அணிந்திருக்கக்கூடாது. "ஓம் கங்க் கணபதயே நமஹ' என்ற மந்திரத்தை ஒரு மாலை (108 முறை) கூறவேண்டும். மேலும் அதிகமாகக் கூறினால், நல்லதே நடக்கும். பிரசாதமாக வைத்தவற்றைப் பிறருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.

விநாயகர் சிலையை வாழை அல்லது சிவப்புநிறத் துணியின் மீது வைத்து, விநாயகருக்கு சாந்து அணிவித்து, தூபம் காட்டி, பூ, பழம் வைத்து, ஒரு பூணூல், நான்கு பாக்குகள் வைத்து வழிபட்டால், பண வசதி உண்டாகும். வியாபாரத்தில் கஷ்டம் இருப்பவர்கள், கடன் பிரச்சினையில் இருப்பவர்கள் வீட்டில் விநாயகருக்கு ஒன்பது சிவப்புநிற மலர்களை வைத்து, ஒரு முழுத் தேங்காயை வைத்து, தூபம் காட்டி, தீபமேற்றி, பிசாதமாக நான்கு கொய்யாப்பழங்களை வைத்து, மதிய வேளையில் அவரை வழிபட வேண்டும்.

 

vinayakar

தலைவலி இருப்பவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று காலையில் குளித்து, விநாயகர் சிலையை ஒரு பீடத்தின்மீது வைத்து, எருக்கம்பூ அல்லது சிவப்பு மலர் அல்லது வெண்ணிற மலர் வைத்து, தூபம், தீபம் ஏற்றி, ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து அதில் சர்க்கரை போட்டு, பன்னீர் வைத்து விநாயகரை வழிபடவேண்டும். பிரசாதத்தையும் பழங்களையும் சாப்பிட்ட பிறகுதான் உணவு சாப்பிட வேண்டும். அந்த நாளில் கோதுமையை தானமளிக்க வேண்டும்.

வயிற்றில் நோய் இருப்பவர்கள் விநாயகருக்கு அரிசிப் பாயசம், வாழைப்பழம், வெல்லம் ஆகியவற்றை வைத்து வழிபடவேண்டும். பாயசத்தை தானும் சாப்பிட்டு, பிறருக்கும் அளிக்கவேண்டும். திருமணத்தடை இருப்பவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வீட்டில் புடவை அல்லது மஞ்சள்நிற வேட்டியை வைத்து, பூந்தி, லட்டு, அறுகம்புல், பூ வைத்து தீபமேற்றி வணங்கவேண்டும். இதைச் செய்தால் திருமணத்தடை நீங்கும். வீட்டில் சந்தோஷ சூழல் நிலவ விநாயகருடன் லட்சுமியையும் வைத்து வழிபடவேண்டும். விநாயகருக்கு சந்தனம், எருக்கம்பூ, மைதாவில் செய்த பூந்தி, லட்டு வைத்து, தூபம், தீபமேற்றி மதியம் 12.00 மணிக்கு பூஜை செய்ய வேண்டும். குடும்பத்திலிருக்கும் எல்லாரும் பகவானுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். பகவானுக்கு வைத்த பிரசாதத்தை அனைவரும் சாப்பிட்டு பிறருக்கும் தரவேண்டும்.


குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வீட்டில் விநாயகரை வழிபட்டு, அரசமரத்திற்குக் கீழே இருக்கும் விநாயகருக்கு பூ, பழம் வைத்து அங்கு ஐந்து தீபங்களை ஏற்றி, தேங்காய் வைத்துப் பூஜை செய்யவேண்டும். வீட்டிலிருப்பவர்கள் அந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்ட பிறகுதான் மதிய உணவைச் சாப்பிட வேண்டும். இதைச் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் நன்கு படிப்பதற்கு வீட்டில் விநாயகருக்கு அறுகம்புல் வைத்து, குழந்தைகளின் புத்தகங்களுக்கு பொட்டுவைத்து, கற்கண்டு, பாதாம்பருப்பு வைத்து தூப தீபமேற்றி வழிபடவேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று அனைவரும் விநாயகரை வழிபட்டு நன்மைகள் பல பெறுவோம்.