Skip to main content

மாசி மகம்; 132 ஆண்டுகளாக பூவராக சுவாமிக்கு, இஸ்லாமியர்கள் வரவேற்பு!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
For 132 years in front of Masi Magam Near Chidambaram, Muslims welcome Bhuvaraha Swami!

கடலூர் மாவட்டம் கிள்ளையில் ஆண்டுதோறும் மாசி மகம் சிறப்பாக  நடைபெறுவது வழக்கம். இதில் கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மேளதாளம் முழங்க கிள்ளை கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு,  தீர்த்தவாரி நடைபெறும். இந்த நிலையில் கிள்ளையில் மாசி மக விழா நடைபெற்றது.

கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான சுவாமிசிலைகள் கிள்ளை கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பலர் கடலில் குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் தந்தனர்.

ஆண்டுதோறும் கிள்ளை கடற்கரைக்கு மாசி மகத் திருவிழாவிற்கு ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி தீர்த்தவாரிக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு கடற்கரைக்கு வழக்கம்போல தீர்த்தவாரிக்கு வந்தது. கிள்ளை தைக்கால் பகுதியில் தர்க்கா டிரஸ்ட் நிர்வாகி சையது சக்ஹாப் தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன் உள்ளிட்டோர் இணைந்து சாமியை வரவேற்று பட்டு சாத்தினார்கள். பின்னர் பூவராகசாமி கொண்டுவந்த பிரசாதத்தை மேளதாளம் முழங்க அதே பகுதியில் உள்ள தர்ஹாவிற்கு எடுத்துச்சென்று உலக நன்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாத்தியா ஓதப்பட்டது. 

இந்நிகழ்வில் பேரூராட்சி உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள்,  பூவராகசாமி கோயில் செயல் அலுவலர் ராஜ்குமார், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கடந்த 132 ஆண்டுகளாக மதங்களை கடந்த மகம் என இந்து - முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் அமைந்து வருவது அனைவரது மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சார்ந்த செய்திகள்