பிரதமர் மோடியின் தனிப்பட்ட மற்றும் அலுவலக ட்விட்டர் கணக்குகளை வெள்ளை மாளிகை நிர்வாகம் Unfollow செய்தது பேசுபொருளாகி இருந்த நிலையில், இதுகுறித்து அமெரிக்கா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்தபோது, அவரது பயணத்திற்கு முன் அமெரிக்க வெள்ளை மாளிகை இந்தியப் பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கம், பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களை Follow செய்தது. பொதுவாக வெள்ளை மாளிகை, அமெரிக்க அரசின் ட்விட்டர் கணக்குகளை மட்டுமே பின்தொடர்வது வழக்கம். ஆனால் இந்தியப் பிரதமர் மோடியை வெள்ளை மாளிகை பின்தொடர்ந்தது பலருக்கு ஆச்சரியம் அளித்தது. இந்நிலையில் இந்த ட்விட்டர் கணக்குகளைப் பின்தொடர்வதை வெள்ளை மாளிகை தற்போது நிறுத்தியுள்ளது. இந்த விவகாரம் இந்தியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், அதிபர் ட்ரம்பின் இந்திய வருகையை முன்னிட்டு, அந்தப் பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளைப் பின்தொடர்ந்தாக தெரிவித்துள்ளார்.