அமெரிக்கா, வடகொரியா இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த அதிகாரி வட கொரிய அரசால் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் இடையேயான 2-வது சந்திப்பு கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது.
இந்நிலையில் 2 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால் உச்சகட்ட கோவத்தில் இருக்கும் கிம், இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த வடகொரியாவின் சிறப்பு தூதரான கிம் ஹயோக் சோல் என்பவருக்கு மரண தண்டனை விதித்துள்ளார். மேலும் இந்த தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டு அவர் கொல்லப்பட்டதாக வடகொரியா ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வியை அடுத்து கடந்த மார்ச் மாதமே அந்நாட்டு விமான நிலையத்திலேயே நான்கு மூத்த வெளிநாட்டு அதிகாரிகள் தூக்கிலிடப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே உச்சி மாநாட்டின் போது கிம்மின் பேச்சை தவறாக மொழி பெயர்த்ததற்காக அவரின் மொழிபெயர்ப்பாளர் சிறைக்கு அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதிகாரிகளின் மரண தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.