மத்திய அமெரிக்காவில் ஒரு நாடான கவுதமாலாவில் எரிமலை வெடித்து பெரிய பாதிப்புகளை எற்படுத்தி வருகிறது. தற்போது அந்த வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.
கவுதமாலா தென் பகுதியில் பியூகோ என்னும் எரிமலை உள்ளது. இது மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ள எரிமலைகளில் மிகவும் அபாயகரமானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், இந்த எரிமலையில் திடீர் சீற்றம் அடைந்தது. அதனால் வெடித்துச் சிதறியது எரிமலை. வெடிப்பினால் வெளியான லாவா குழம்புகள், விஷ வாயுக்கள் தாக்கியதில் 50 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எரிமலை சீற்றம் தணிந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு இரண்டு நாட்களாக காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், திடீரென எரிமலை வெடித்ததில், அப்பகுதியைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200 பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் அந்நாட்டு ராணுவத்தினரும், மீட்புக் குழுக்களும் ஈடுபட்டுள்ளனர்.