அமெரிக்காவில் காவலர் ஒருவரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் மினசொட்டாவில் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணை ஒன்றின் போது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் ஒருவர் காவலரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனிடையே இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட நான்கு காவலர்களும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற ஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்திற்குப் பிறகு ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் ஹூஸ்டனில் அவரது தாயாரின் உடலுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வு குறித்துப் பேசியுள்ள ஜார்ஜ் ஃபிளாய்டின் சகோதரி, "உலகம் முழுவதும் ஜார்ஜ் ஃபிளாய்ட் நினைவு கூரப்படுவார். அவர் இந்த உலகை மாற்றுவார்” எனத் தெரிவித்துள்ளார்.