வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை போராட்டக்காரர்கள் சிலர் சேதப்படுத்திய சம்பவத்திற்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் மன்னிப்பு கோரியுள்ளார்.
அமெரிக்காவின் மினசொட்டாவில் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணை ஒன்றின் போது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பின இளைஞர் ஒருவர் காவலரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கருப்பின மக்களுக்கு எதிரான ஓடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதில் வாஷிங்டனில் நடந்த போரட்டம் ஒன்றில், அங்கிருந்த காந்தி சிலையைப் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர், இதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "இந்தியத் தூதரகத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்காக அமெரிக்கா சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இதனை இந்திய அரசு கருணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.